நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மோகன் சி.லாசரஸ் பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ரெடீமர்ஸ் கிளப் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டிகள் நாலுமாவடி ஏலீம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் ஜெபித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி, பள்ளி பெண்களுக்கென 3 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டி நிறைவில் கல்லூரி ஆண்கள் 17 கி.மீபோட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் மாணிக்கத்துரை முதலிடமும், ராமநாதபுரம் அரசு கலை கல்லூரி மாணவர் ராமர் 2 வதுஇடமும், சென்னை யூனிவர்சிட்டி மாணவர் ஜெயசீலன் 3 வதுஇடமும் பெற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான 10 கிமீ போட்டியில் தூத்துக்குடி காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் கருத்தபாண்டி முதலிடமும், திருச்சி ரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் லோகேஸ்வரன் 2 வதுஇடமும். தூத்துக்குடி காட்டு நாயக்கன்பட்டி நடராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவர் மணிசெல்வன் 3 வதுஇடமும், மாணவிகளுக்கான 5 கிமீ போட்டியில் தூத்துக்குடி காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவி கனகலட்சுமி முதலிடமும், திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரி மாணவி சதா 2 வது இடமும், தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவி ராதிகா 3 வது இடமும் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், ஏரல் தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் அனைவரையும் வரவேற்றார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ், திருவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், நெல்லை தமிழ்நாடு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தசரதன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் வழங்கினார்கள். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காலை உணவு மற்றும் டி.சர்ட்டும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஜெயம் அன்கோ ஸ்டான்லி, டாக்டர் சாம்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார், விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் மணத்தி கணேசன், எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


