வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் நவகைலாயங்களில் ஆறாவது ஸ்தலமாகவும் சனி ஸ்தலமாகவும் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தை சுற்றி இடுப்பளவிற்கு சுமார் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை சுற்றிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளோ சிறுவர்களோ அந்த வழியாக சென்றால் கீழே தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் இந்த சிவன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் உள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது இரண்டு மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்தார்.


