மேல முன்னீர் பள்ளம் ஊருக்கு செல்லும் போது நம்மை வரவேற்பது ஆலமரத்து சுடலை தான். இவர் பெட்டைக் குளக் கரையில் ஒய்யராமாக இருக்கிறார். இந்த கோயிலில் பல்வேறு பூடங்கள் உள்ளன. பெரும்பாலுமே தாமிர பரணி கரையில் காணப்படும் சுடலை போல இவர் இருந்தாலும் கூட பிள்ளையாரை போல குளத்துக் கரையில் அமர்ந்து அருள் பாலிக் கிறார்.
அது என்ன பெட்டைக்குளம்?. பெரும்பாலுமே பொட்டல் காடுகளில் மானவாரியாக மழைபெய்யும் போது நிறையும் குளங்களைத £ன் பொட்டல் குளங்கள் என அழைப்போம். அதுவே மருவி பெட்டைக்குளம் ஆகி இருக்க வேண்டும்.
அதுபோலத்தான் இந்த பெட்டைக்குளமும் மானம் பார்த்த பூமி தான். ஆரைக்குளம் உள்பட அம்பாசமுத்திரம் சாலைகளுக்கு எதிரே அடித்து வரும் காட்டாற்று வெள்ளத்தை தேக்கி வைக்க பயன்படுத்தப்படும் குளம் தான் இது. மிகச்சிறிய குளம். குறிப்பாக மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருக்கும்.
இங்கு தண்ணீர் இருக்கும் போது அருகில் உள்ள கிணற்றில் எல்லாம் தண்ணீர் பெருகி விடும் இதனால் விவசாயத்தினை ஆண்டு முழுவதும் செய்வார்கள். பாசனத் தினை நம்பியும் வயல் வெளிகள் உள்ளது. இந்த வயல் வெளிகளில் தண்ணீர் பாய்ந்த பின்பு பளையங்கால்வாயில் விழுந்து தாமிரபரணி பாசனத்துக்கு இந்த தண்ணீர் சென்று விடும்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் பெட்டைக்குளம் பாசனம் இருந்தாலும், இங்குள்ள பாசன நிலங்கள் உவர் மண்ணால் ஆனது. ஆற்றங்கரைஉள்ளது போல விவசாயத்துக்கு உகந்த மண் கிடையாது. எனவேதான் இங்கு நெற்பயிர்களை பிரமாண்டமாக சாகுபடி செய்ய முடியாது. பருத்தி போன்ற காய்ச்சல் நேரத்தில் பயிரிடப்படும் பயிர்களை தான் பயிரிட முடியும். தற்போது இங்கு பயிர் செய்பவர்கள் குறைந்து விட்டனர்.
முற்காலத்தினை போலவே விவசாயம் செய்போரின் எண்ணிக் கையும் குறைந்து விட்டது. இங்கு தண்ணீர் வரத்தும் குறைந்து விட்டது. எனவே தான் விவசாயம் இந்த குளத்துப்பாசனத்தில் குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் இங்குள்ள மீனம்மாள் புரம் , கீழ முன்னீர் பள்ளம் மக்கள் இந்த இடத்தில் ஒரு சில இடத்தில் பயிர் செய்கிறார்கள்.
குபேரன் நகர் உள்பட பல புதிய குடியிருப்புகள் பெட்டைக் குளத்தின் நீர் பிடிப்பு பகுதியில் பெருகி விட்டது.
எனவே பெட்டைக்குளம் குறுகிக்கொண்டே வருகிறது.
ஆனாலும் இந்த பெட்டைக் குளம் கரையில் உள்ள ஆலமரத்து சுடலைக்கு எப்போதுமே தனி பெருமை உண்டு.
இங்குள்ள யாதவர் குல மக்கள் வணங்கும் தெய்வம் ஆலமரத்து சுடலை. இந்த தெய்வத்தினை காண பட்டிமன்ற பேச்சாளர் புத்ததேனரி செல்லப்பா அய்யாவுடன் சென்றோம். அவர் மனைவியின் சொந்த ஊர் என்பதாலும், அவரது சொந்த பந்தங்கள் தான் இந்த சுடலையை வணங்குகிறார்கள் என்றவுடன் கோயில் படத்தினை எடுக்க எங்களுக்கு உடனே அனுமதி கிடைத்தது.
ஆலமரங்கள் பெருத்து இருக்கும் பெட்டைக்குளம் கரையில் இந்த கோயில் இருந்தது.
இந்த கோயிலில் பங்குனி மாதம் கோயில் கொடைவிழா நடைபெறும் என்று அவர் கூறினார்.
ஆலமரத்து சுடலை ஒரு சுற்றுப்புறச்சுவருக்குள் உள்ளார். எதிரே ஸ்ரீமாசான கரையான் சுவாமி அருள் பாலிக்கிறார். அவர் சுடலையை நோக்கியுள்ளார்.
அவரை வணங்கி விட்டு சுற்றுப்புறச்சுவரை தாண்டி உள்ளே செல்கிறோம். எங்களை தொண்டடி மாடன் சுவாமி எங்களை அன்போடு வரவேற்கிறார். அவரை வணங்கி விட்டு உள்ளே செல்கிறோம். எங்கும் ஆலமரம்.
அந்த நிழலில்தான் ஒய்யார மாக காட்சி தருகிறார் ஆலமரத்து சுடலை. சொல்லப்போனால் கோயிலை சுற்றியும், கோயில் சுற்றுப்புறச்சுவரிலும் ஆலமரம் உள்ளது.
ஆலமரங்கள் நிறைந்து இருக்கும் இடத்தில் உள்ள சுடலை தான் ஆலமரத்து சுடலை என்றழைக்கப்படுகிறார் என புரிந்து கொண்டோம். அந்த அளவுக்கு ஆலமரங்கள் சூழ்ந்து காணப் படுகிறது.
முதன்மை தெய்வமாக ஆலமரத்து சுடலை நமக்கு கிழக்கு நோக்கி அருள் தருகிறார். அவர் அருகில் தனிச்சன்னிதியில் சிவனைந்த பெருமாள் உள்ளார்.
முதன்மை சன்னதியில் ஆலமரத்து சுடலைக்கு வலது புறத்தில் பேச்சியம்மன், பேச்சி பிள்ளை, பிரம்மசக்தி, ஆகியோரும் இடது புறம் முண்டசாமி ஆகியோர் அமர்ந்து மக்களுக்கு அருள் தருகிறார்கள். சில கோயில்களில் முண்டன் எதிரே தான் இருப்பார். இங்கே அருகருகே இருந்து அருள் தருகிறார்கள்.
வலது புறத்தில் தெற்கு நோக்கி கசமாடன், முத்து புதியவன், பலவேசகாரன் ஆகிய சுவாமிகள் உள்ளனர்.
இந்த கோயிலை பொறுத்தவரை இந்த ஊரைச்சேர்ந்த யாதவர் குடும்பத்தில் குழந்தை பிறந்தால், இவருக்கு பொங்கல் இட்டு படையல் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
இங்கு பிறந்து வெளியூரில் கட்டிகொடுத்த பெண் பிள்ளைகள், பேறுகாலத்துக்கு வந்திருந்தால், இந்த கோயிலில் பொங்கலிட்ட பிறகே தன் குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்லும் வழக்கத்தினை வைத்துள் ளார்கள்.
தாமிரபரணி நதிக்கரையில் ஊருக்கு நான்கு சுடலை மாடன் நிலைக் கொண்டிருப்பார். ஊர்க்காடு, பொழிக்கரை, ஒத்தப்பனை , சிவலப்பேரி, ஐகோர்ட் மகராஜா, மாரடிச்சான் சுடலை உள்பட பல்வேறு சுடலைகள் உள்ளன்.
அது போலத்தான் இந்த சுடலையும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து இந்த ஊரில் குடி கொண்டுள்ள மக்கள் மூலமாக நிலையம் கேட்டு வந்திருக்க வேண்டும். ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்த காரணத்தினால் இதற்கு ஆலமரத்து சுடலை என்று பெயர் வந்திருக்க வேண்டும்.
கூடுதல் விவரம் சேகரிக்க உள்ளூர் அன்பர்களிடம் பேசியிருக்கிறோம். தொடர்ந்து மக்களுக்கு சுடலை அருளும், பொன்னும் பொருளும் அள்ளித்தருவதாலும், வேலை வாய்ப்பு, நாள் பட்ட திருமணம் நடப்பது உள்பட நல்ல காரியங்களை நடத்தி காட்டுவதால் வருடந்தோறும் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் வரவு கூடிக்கொண்டே இருக்கிறது.
(நதி வற்றாமல் ஓடும்)


