தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கரையடி சுடலைமாடன் கோவில் அருகே உள்ள சுடுகாட்டுப்பகுதியில் ஒரு மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் மற்றும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது எரிந்த நிலையில் கிடந்தது சாத்தான்குளம் நாசரேத் சாலைத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கண்ணன் (55) என்பது தெரியவந்தது. இவர் சாத்தான்குளத்தில் தச்சுத் தொழில் செய்து வந்துள்ளார்.
கொலை செய்யப்பட்டுள்ள கண்ணன் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் உள்ளனர். கண்ணன் தற்போது தனியாக வசித்து வந்துள்ளார்.
மேலும் கண்ணன் முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட காயம் உள்ளது. மேலும் அவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்து பின்னர் அங்கிருந்த முற்செடிகளை அவர் மீது போட்டு எரித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது அருந்திய தகறாரில் கண்ணனை கொலை செய்ததாக சாத்தான்குளம் தஞ்சைநகரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தாவீது (25), திசையன்விளையைச் சேர்ந்த தங்கதுரை மகன் டேனி செல்வம் (22) ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொலையாளி தாவீது கடந்த 2021 ஜுலை 7ம் தேதி சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரத்தைச் சேர்ந்த அருமைக்கொடி என்பவரை குடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். குடிபோதை தலைக்கேறிய பின்னர் குடிக்க அழைத்துச் சென் அருமைக்கொடி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளி வந்த தாவீது தொடர்ந்து மாதம் தோறும் நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு சென்று வந்துள்ளார். சம்பவம் நடந்த நாளுக்கு முந்தய தினமும் அவர் வாய்தாவிற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் கண்ணன், டேனி செல்வம் ஆகியோருடன் சேர்ந்த நேற்று முன்தினம் மாலை சுடுகாட்டுப் பகுதியில் குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகறாரில் தாவீதும், டேனி செல்வமும் சேர்ந்து கண்ணன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்த முற்செடிகளை அவர் மீது போட்டு தீயிட்டு கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கடந்த வருடம் இதே போல் நடந்த கொலை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தாவீதை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தாவீது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
சைக்கோ கொலையாளி குடிபோதையில் தச்சுத்தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


