தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. மாற்றுத்திறனாளியான இவருக்கு மன நலம் பாதிக்கப்பட்ட உதயகுமார் என்ற 40 வயதில் மகன் உள்ளார்.
பானுமதியின் கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அவரது உழைப்பை மட்டுமே நம்பியிருந்த இந்த குடும்பம் கடந்த 8 வருடமாக வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் தற்போது வரை பானுமதி தனது மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மகனுடன் குடியிருந்து வந்தார். வீட்டின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் வண்ணம் இருந்தது. மேலும் சில சிமெண்ட் தளங்கள் இப்போது விழவா, அல்லது இரவு விழவா என்று விழும் நிலையில் இருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்தில் பல்வேறு பத்திரிக்கை மற்றும் ஊடகம் வாயிலாக கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் கடந்த 08.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் வந்து புதிதாக முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார். மேலும் அந்த இடத்திற்கு பட்டாவையும் வழங்கினார்.
இந்த நிலையில் வீட்டின் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது கேட்டறிந்து வந்தார்.
இதற்கிடையில் வீடு கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில், வீட்டின் முன்புறம் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும் வகையில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல்வரின் பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை திறக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வருகை தந்தார். அவரை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். அவர் மாற்றுத்திறனாளி பெண் பானுமதியிடமும், அவரது மகன் உதயகுமாரிடமும் தற்போது புதிதாக வீடு கட்டப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பத்திரிக்கையாளர்களால் தான் எனக்கு இந்த வீடு கிடைத்தது. அவர்களுக்கும் உங்களுக்கும் எனது நன்றி என்று தெரிவித்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை வழியாக சென்று வீட்டை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து வீட்டில் குத்துவிளக்கை பானுமதியை ஏற்ற மாவட்ட ஆட்சியர் உள்பட அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர். பானுமதி மாவட்ட ஆட்சியருக்கு குங்குமம் இட்டு தனது நன்றியை தெரிவித்து மகிழ்ந்தார். பின்னர் அனைவரும் வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் ராஜா, கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம்லீலா, ஒன்றிய பொறியாளர் சித்திரைசேகர், ஆழிகுடி பஞ்சாயத்து தலைவர் முருகேஸ்வரி, மற்றும் ஒன்றிய அலுலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


