ஆத்தூர் அருகே தோட்டத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் எரிந்து நாசமாயின.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே மேலாத்தூர் கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. காய்ந்த சருகுகள் மளமளவென எரிந்து தீ நாலாபுறமும் பரவியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தங்கள் வீட்டின் மோட்டாரை இயக்கி தீயை அணைக்க போராடினர். ஆனாலும் தீ கட்டுக்குள் அடங்கவில்லை.
இதையடுத்து தகவலின் பேரில் சாகுபுரம் டி.சி.டபிள்யு நிறுவனம் மற்றும் திருச்செந்தூர் அரசு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் எரிந்து நாசமாயின. தீவிபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து காரணமாக மேலாத்தூரில் இருந்து குச்சிக்காடு வரை புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


