வல்லநாடு வெளிமான்கள் சரணாலயத்தில் மான்கள் கணக்கெடுப்பு நடந்தது.
இந்தியாவிலேயே வெளிமான்களுக்கான தனியாக ஒரு சரணாலயம் இருக்குமிடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ளது. இந்த வெளிமான்கள் சரணாலயத்தில் வருடம் தோறும் மான்கள் உள்பட விலங்கினங்கள் கணக்கெடுப்பு நடைபெறும். கடந்த வருடம் வரை 243 வெளிமான்கள், 47 புள்ளிமான்கள் மற்றும் 30 கடமான்கள் என மொத்தம் 320 மான்கள் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மற்றும் இன்றைய தினம் என இரண்டு தினங்கள் மாவட்ட வன அலுவலர் அபிசேக் தோமர் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வல்லநாடு வெளிமான்கள் சரணாலயத்தில் மான்கள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள், விலங்கு ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் மான்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த வருடம் 320 மான்கள் இருந்துள்ளது. இந்த வருடம் அது அதிகரித்து 340க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முள்ளம்பன்றி, எறும்புத்தின்னி, உடும்பு, மலைப்பாம்பு, கீரிப்பிள்ளை, குள்ளநரி, காட்டுமுயல், மரநாய் என ஏராளமான வன விலங்குகளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


