ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வரும் மார்ச் 6-ம் தேதி சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
சனீஸ்வர பகவான் வரும் மார்ச் 6-ம் தேதி காலை 7:37 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு, நவ கைலாயங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் பகல் 12:30 மணிக்கு பூர்ணாகுதி நடைபெறும். தொடர்ந்து யாகசாலையில் தீபாராதனை, வழிபாடுகள், மந்திர ஜெபம் மற்றும் திருமுறை பாராயணம் நடைபெறும். கைலாசநாதர் சுவாமி மற்றும் சிவகாமி அம்பாளுக்குச் சிறப்புத் தீபாராதனையும், மாலை 5 மணிக்குச் சுவாமி – அம்பாளுக்கு லட்சார்ச்சனையும் நடைபெறும்.
மார்ச் 5-ம் தேதி: காலை 7 மணி முதல் 8 மணி வரை: மஹன்யாஜ ஜெபம், காலை 9 மணிக்கு ருத்ர ஜெபம் ஆரம்பம். பகல் 12:30 மணிக்கு பதினொன்றாம் கால ருத்ர ஹோமம், மஹாபூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை. தொடர்ந்து கும்பம் புறப்பாடாகி, மேள தாளம் முழங்க சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியைச் சென்றடையும். தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், அலங்காரத் தீபாராதனை நடைபெறும். மாலை 3 மணிக்கு சங்கல்பம், மாலை 4 மணிக்கு நவக்கிரகம் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கும்.
மார்ச் 6-ம் தேதி (பெயர்ச்சி நாள்): காலை 4:30 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 6 மணிக்கு பூர்ணாகுதி, காலை 7 மணிக்கு யாகசாலையிலிருந்து கும்பம் புறப்பாடாகி சனீஸ்வர பகவான் சன்னதியைச் சென்றடையும். அங்கு சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.


