தூத்துக்குடியில், இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வலியுறுத்தி முடிதிருத்தும் தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில், கடந்த 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகத் தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவை வேதனை தெரிவித்துள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து வாடகை வீட்டில் தவிக்கும் 229 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் தலையிட்டு விரைந்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணியன், மாநில பொருளாளர் அழகர்சாமி மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாவட்டச் செயலாளர் விஜயகுமார், மாவட்டப் பொருளாளர் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் தென்மண்டல அமைப்பாளர் செல்வராஜ் மற்றும் 60 பெண்கள் உட்பட மொத்தம் 130 பேர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தமிழக முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு மற்றும் வரவேற்பு பணிகளுக்காக வட்டாட்சியர் (தாசில்தார்) உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் விமான நிலையம் சென்றனர். இதனால் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த போதிய அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை.
அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையிலும், தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். இதனால் தாலுகா அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


