செய்துங்கநல்லூர் சிவன்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட அனுமதி தரவேண்டும் என் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆன்மிக பக்த பேரரவை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தென்னகத்தில் 1000 வருடம் பழமையான ஆலயம் செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிர பாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் தென் தில்லை என்று போற்றப்படுகிறது. இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளது. இதன் மூலம் இவ்வூர் “செய்துங்க நாட்டு சதுர்வேதி மங்கலம்” என அழைக்கப்படுவது தெரியவருகிறது. இந்த கோயிலில் தற்போது திருப்பணி முடிந்து திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் செல்ல முடியாதவர்கள் கூட இந்த கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். எனவே ஊர் மக்களும் பக்தக் கோடிகளும் இணைந்து இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளோம். எனவே தாங்கள் தயவு கூர்ந்து இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட அனுமதியும், உதவியும் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
என்று கோரியிருந்தனர். மேலும் கோயிலுக்கு நேரில் வந்து 27 நட்சத்திர மரக்கன்றுகளை நடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் கூறும்போது செய்துங்கநல்லூரில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. அந்த சமயத்தில் செய்துங்கநல்லூர் வருகை தருவேன் அந்த சமயத்தில் கோயிலுக்கு வருகிறேன். மேலும் இந்த மனு கூறித்து நடவடிக்கை எடுக்கிறேன் என ஆன்மிக பக்த பேரரவையினரிடம் கூறினார். கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உடனிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆன்மிக பக்த பேரவையை சார்ந்த குரு மாரியப்பன், சுப்புலெட்சுமி, முத்து லெட்சுமி, முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் எம்.பி. முத்து சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


