Passenger train in the Countryside near Pune India.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 17 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, குமரி புறக்கணிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் நேற்று முதல் இயங்கி வருகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து பாலக்காடு வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு, பெரம்பூர் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் நாளை எர்ணாகுளத்திலிருந்து செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதேபோல் 22ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை சென்னையிலிருந்து எர்ணாகுளம், கொல்லத்துக்கும், எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கும் 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் 17 சிறப்பு ரயில்களில் நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஒன்றுகூட இயக்கப்படவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. சென்னை மற்றும் கேரள மாநிலத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் உள்ளனர். ஆனால் தெற்கு ரயில்வே தென்மாவட்டங்களை புறக்கணிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற சிறப்பு ரயில்களை நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாநில பயணிகள் சங்க தலைவர் சாந்தக்குமாரிடம் கேட்டபோது, இதுபோன்ற நடவடிக்கைகளில் தெற்கு ரயில்வே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பெயர்தான் தெற்கு ரயில்வே என்று உள்ளது. ஆனால் தென் மாவட்டங்களை தொடர்ந்து புறக்கணிப்பதே தெற்கு ரயில்வேயின் வேலையாக உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி பகுதியை சேர்ந்தவர்கள்தான் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு மாறாக தெற்கு ரயில்வே நிர்வாகம் செயல்படுகிறது.
தொடர்ந்து இதுமாதிரி செயலில் ஈடுபடும் ரயில்வே நிர்வாகத்தை நெல்லை, தூத்துக்குடி, குமரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டிக்க வேண்டும். கண்டிக்க வேண்டியவர்கள் ஏன்? மவுனம் காக்கின்றனர் என்று தெரியவில்லை. இப்போது இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் இதேபோல் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
தமிழகத்தின் தென் பகுதிகளான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் சென்னை கோவை திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. எனினும் இந்தப் பகுதிகளுக்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்க தாமதப்படுத்துகிறது. மேலும் புதிய ரயில்களிலும் இயக்கம் முன் வருவதில்லை. தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு ஆதரவாக தென்னக ரயில்வே தமிழகத்தின் தென் பகுதிகளை புறக்கணிக்கிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


