தூத்துக்குடியில் 635 பேருக்கு கணினிவழி இ- பட்டாக்களை சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற விழாவில் 635 பேருக்கு கணினிவழி இ- பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் பங்கேற்று, பட்டாக்களை வழங்கிப் பேசியது: அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போரில், வருவாய்- பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், தற்போது தூத்துக்குடி வட்டத்துக்குள்பட்ட 635 பேருக்கு ரூ. 20,67,44,840 மதிப்பிலான கணினிவழி இ- பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
தூத்துக்குடி பேரவைத் தொகுதி மாப்பிள்ளையூரணிக்குள்பட்ட 250 பேருக்கும், மற்ற பகுதிகளில் உள்ள 385 பேருக்கும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. வருமானம் அதிகமுள்ளோருக்கு அவர்கள் குடியிருக்கும் இடத்துக்கு வழிகாட்டி மதிப்பில் பணம் கட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம் கட்டிய பிறகு அவர்களுக்கும் பட்டா வழங்கப்படும் என்றார் அவர்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. ரவிச்சந்திரன், ஆணையர் சி. ப்ரியங்கா, கோட்டாட்சியர் மி. பிரபு, துணை மேயர் செ. ஜெனிட்டா, வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


