செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளம் வரும் முன்பே இங்குள்ள மக்களை வெளியே அழைக்க முயற்சி செய்தனர். ஆனால் மக்கள் தங்கள் மண் மீது உள்ள பாசத்தாலும், நதியில் இதுபோன்ற பெரிய வெள்ளம் ஒரே நாளில் வராது என்ற நம்பிக்கையும் இருந்து விட்டனர். இதற்கிடையில் வெள்ளம் சுற்றிய இந்த ஊரில் மக்கள் எங்கேயும் வரஇயலவில்லை. இங்குள்ள பசும்பொன் தெருவில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தில் மக்கள் இருபுறமாக பிரிந்து மேடான பகுதிகளுக்கு சென்றனர். அதில் ஒரு பிரிவினர் பாதுகாப்பான பகுதிக்கும் மற்றொரு பிரிவினர் சென்ற பகுதியில் வெள்ள அச்சத்துடன் இரண்டு நாள் வாழ்ந்தனர். இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்துங்கநல்லூர் வருகை தந்தபோது ஆழிகுடி, கருங்குளம், முத்தாலங்குறிச்சி மற்றும் வசவப்புரம் உள்பட பகுதிகளுக்கு படகு அனுப்பபட்டது. அங்குள்ள மக்களும் சமூக சேவர்களும் இந்த முயற்சியில் படகோட்டிகளும் ஒத்துழைத்தனர். முதல் கட்டமாக ஆழிகுடி மக்கள் மீட்கப்பட்டனர். முத்தாலங்குறிச்சி செங்கல் சூளையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தை உள்பட ஐந்து பேர் மீட்கப்பட்டனர். அதன் பிறகு தொடர்ந்து முத்தாலங்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டு கிருஸ்ணா புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இங்குள்ள மக்கள் வெளியே வரும் சாலை விட்டிலாபுரம் அருகே துண்டிக்கப்பட்டது. இதனால் மூன்று கிலோ மீட்டர் தொலைவு இந்த மக்கள் நடந்து வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால் நிவாரண பொருள்கள் எதுவும்கொண்டு செல்ல இயலவில்லை. இதனால் உள்ளூரில் உள்ள மக்கள் குடிக்க தண்ணீர் இன்றியும் , சாப்பிட சாப்பாடு இன்றி, குழந்தைகளுக்கு பால் இன்றியும் தவித்தனர். இதற்கிடையில் கிறிஸ்ணாபுரம் மண்டபத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் ஊருக்கு வரும் போது போர்வை தலைவாணி போன்ற பொருள்கள் கொடுத்து விட்டனர். அவர்கள் தலை சுமையாக மூன்று கிலோ மீட்டர் நடந்தே வீடு வந்து சேர்ந்தனர்.
இதற்கிடையில் தொண்டு நிறுவனத்தினை சேர்ந்த வாலிபர்கள் இவர்களுக்கு பால், பிஸ்கட் தண்ணீர் பாட்டில் நேற்று இரவு 6 மணிக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர்களால் உள்ளே செல்ல இயலவில்லை. எனவே ஊரில் உள்ள வாலிபர்கள் நடந்து வந்து இவர்களோடு பொருள்களை ஊருக்குள் கொண்டு சென்றனர். ஆனால் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே தொண்டு நிறுவனத்திரால் கொடுக்க முடிந்தது. ஆனால் மற்ற மக்களுக்கு கொடுக்க இயலவில்லை. செய்துங்கநல்லூரில் லட்ச கணக்கில் பொருள்கள் அரசு மூலம் தனியார் மண்டபத்தில் இறக்கப்பட்டுள்ளது. இதை துண்டிக்கப்பட்ட கிராமத்துக்கு கொண்டு செல்ல டிப்பர் லாரி, ஜே.சி.பி போன்றவை நிறுத்தப்பட்டு இங்கிருந்து பல பகுதிக்கு பொருள்கள் கொண்டு செல்வதாக அறிவித்தனர். ஆனால் இவர்கள் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சியில் உள்ள மக்களுக்கு எந்த பொருளும் கொடுக்க முயற்சி செய்ய வில்லை. இதனால் முத்தாலங்குறிச்சி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். பஞ்சயாத்து தலைவர் சார்பில் லெட்சுமணன் இவ்வூருக்கு போருள் தேவை என இந்த குழுவினரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதற்கிடையில் நேற்று அதிகாலை முத்தாலங்குறிச்சி கிராம மக்கள் தங்கள் ஊருக்கு சாலை அமைக்க வேண்டும், மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறி சாலை மறியல் செய்ய செய்துங்கநல்லூர் நோக்கி வந்தனர். இது குறித்து கேள்வி பட்ட செய்துங்கநல்லூர் போலிசார் அவர்களை விட்டிலாபுரத்தில மறித்து ஆவண செய்வதாக வாக்களித்தனர். கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் அந்த மக்களை சந்தித்து உடனடியாக மின்சார வசதியை செய்து கொடுத்தார். தொடர்ந்து அவர்களுக்கு சாலை அமைக்கும் பணியை துவங்கினார். இதனால் மக்கள் சந்தோசமாக வீடு வந்து சேர்ந்தனர். இன்று வரை வேலை நடந்து வருகிறது. நாளை போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


