கைலாசம் பாலச்சந்தர் கே. பாலச்சந்தர், 9 சூலை 1930 – 23 திசம்பர் 2014) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி. தந்தை: கைலாசம் ; தாயார்: காமாச்சியம்மாள். தந்தைக்கு, கிராம முனிசிஃப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல், இவரது பள்ளித் தோழர். எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர். “கவிதாலயா” என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக, பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


