“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டணம் நகராட்சி ஜலாலியா நிஹ்ஹாக் மஜ்லீஸில் இன்று (22.11.2023) மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கில் சோதனை முன்னோட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ், நடத்தப்படும் முகாமில் பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர் மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இன்று பெறப்பட்ட 584 மனுக்கள் அரசு இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டது. இம்மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டணம் நகர்மன்றத் தலைவர் முத்து முஹம்மது, நகர்மன்றத் துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, காயல்பட்டணம் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரகுராம், அரசு உயர் அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


