தாமிரபரணி கரையில் உள்ள அற்புதங்களில் அத்தாள நல்லூர் அருங்காட்சியகமும் மிகவும் விசேசமானது. அத்தாளநல்லூர் கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்பர். எனது தலைத்தாமிரபரணி நூலில் அதைப்பற்றியும் அவ்வூரில் உள்ள கஜேந்திர பெருமாள் கோயில் குறித்தும் எழுதியிருப்பேன். இந்த ஊரில் உள்ள இந்த கோயிலும், திருப்புடைமருதூர் நாறும்பூ நாதர் சுவாமி கோயிலும் திருப்பணி செய்து, கும்பாபிசேகம் நடக்க காரணமாக இருந்தவர் உயர்நீதி மன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். மிகப்பெரிய இந்திய பணககாரர் பிர்லா அவர்களின் துணைவியார் வர்தமம்மாளை அழைத்துவந்து, அவர்கள் பண உதவியுடன் இந்த கோயில்களை மேம்மைபடுத்தியுள்ளார் இந்த மண்ணின் மைந்தன் ரத்தினவேல் பாண்டியன். இவருடை ஆலோசனை பேரில் அத்தாள நல்லூரில் முருகையா பாண்டியன் வைத்துள்ள அருங்காட்சியகத்தில் பல வினோதமானப் பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கே வெளியே தெரியாமல் உள்ளது. இங்குள்ளப் பொருட்கள் பற்றியும் இதைச் சேகரிக்க முருகையா பாண்டியன் பட்ட கஷ்டங்களையும் பதிவிடுவது அவசியம்.
அத்தாள நல்லூர் கஜேந்திர பெருமாள் கோவில் முன்புறம் நாங்குநேரி ஜீயர் சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான மண்டபம் வடக்கு பார்த்து உள்ளது. இந்த மண்டபத்தினைப் பிதுர் கடன் கழிக்க அந்தணர்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 28 வருடங்களுக்கு (1994) முன்பு இந்த மண்டபத்தில் பாம்புப் புற்றுகள் அடர்ந்து மோசமான சூழ்நிலையில் இருந்தது. அப்போது கஜேந்திரர் கோயில் அறங்காவலர் பொறுப்பை ஏற்றார் முருகையா பாண்டியன். அவர் முதன் முதலாகப் பிதுர் கடனை இங்கு வைத்துக் கழிக்கக்கூடாது எனத் தடை விதித்தார்.
ஆனால் அதை அந்தணர்கள் கேட்கவில்லை. வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எங்கிருந்தோ வந்த கல் இருவருக்கும் நடுவே விழுந்தது. உடனே அந்தணர் அது பகவான் எறிந்த கல். எனவே இனி பிதுர் கடன் கழிப்பதை விட்டு விடுவோம் என உறுதி அளித்து நிறுத்தி விட்டனர். அதன் பிறகு அந்த மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று ஆசை கொண்ட முருகையா பாண்டியன் தான் 40 வருடமாகச் சேர்த்து வைத்திருந்த அரும்பொருட்களை எல்லாம் அங்கு வைக்க வேண்டுமென்று நினைத்தார்.
மண்டபத்தில் பாம்புகள் புற்றுக்குள் வாழ்ந்து வந்தன. மேல் மண்டபக் கற்கள் உடைந்து விழுந்து விடுமோ எனப் பயத்தை ஏற்படுத்தியது. முதலில் பயம் தோன்றினாலும் நல்லக் காரியத்துக்குப் பயன்படுத்தும் போதும் ஆண்டவன் துணை இருப்பான் என நான்குநேரி சென்று ஸ்ரீவானுமாமலை ஜீயர் சுவாமிகளிடம் மண்டபத்தை கேட்டார். அவரும் “நல்லக் காரியம், இந்த அருங்காட்சியகம் பிற்காலத்தில் நன்றாக வரும் செய்” என்று அனுமதி தந்து அனுப்பி வைத்தார்.
முருகையா பாண்டியன் சந்தோசத்துடன் அத்தாளநல்லூர் வந்தார். அங்குப் பாம்புகளை விரட்ட முயற்சி நடந்தது. மண்டபத்தினுள் நுழைந்து பாழடைந்து கிடந்த மண்டபத்தைப் புதுப்பித்தார். அவரின் முயற்சியின் பலனாக அனைத்து பாம்புகளும் வெளியேறத் தூசி துடைக்கப்பட்டு பழுது பார்க்கப்பட்டு மண்டபம் தயாரானது. அவருக்கு உதவியாய் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் இருந்தார்.
அதன்பின்பு கஜேந்திர வரதர் அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை முருகையா பாண்டியன் உருவாக்கி அதற்கு இயக்குநரான அவர், முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் கலை கலாச்சார மையம் மூலம் அருங்காட்சியகத்தை அரசு அனுமதி பெற்றுத் துவங்கினார்.
அருங்காட்சியகத்திற்குப் பழைய அரும் பெருமையானப் பொருட்களைத் தாமாகப் பெற்று அருங்காட்சியகம் அலங்கரிக்கப்பட்டது. தன்னிடம் இருந்த அரிய பொக்கிஷம் , நாணயங்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைத்தார்.
சுமார் 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எழுத்தைத் தமிழி எழுத்து என்று கூறுவார்கள். இந்த எழுத்து ஏட்டில் எழுதும் போது இலகுவாக இருக்கும். 13-ஆம் நூற்றாண்டில் கல்வெட்டில் எழுதியுள்ள வட்ட தமிழ் எழுத்துக்களும், நடுவில் தற்போது உள்ள தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட வரவேற்பு பலகையுடன் அருங்காட்சியகம் சிறுவாசல் மூலம் துவங்குகிறது. உள்ளே மிகப்பெரிய அறை. எங்கே திரும்பினாலும் அதிசயம், அற்புதம். சுமார் 2500 வருடங்களுக்கு முற்பட்ட பொருட்கள் முதல் தற்போதுள்ள அதிசயப் பொருட்கள் வரை அங்கு உள்ளது.
வட்ட எழுத்துக்களைப் பார்த்து விட்டு உள்ளே சென்றவுடன் எதிரிகளால் தாக்கப்பட்டு உடைந்துபோன சிலைகள் காணப்படுகிறது. உள்பக்கம் சென்றவுடன் பழமையான காலத்தில் நடப்பட்ட நடு கற்களையும், அதில் குறியீடு இருப்பதையும் காணலாம். அருகில் கிழக்கு நோக்கி உப்பு வணிகர் முத்தூர் என்ற அழைக்கப்பட்ட உப்பூர் கோவிலில் உடைக்கப்பட்ட சிலைகள் உள்ளது. சுற்றி சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்ட மற்ற அபூர்வப் பொருட்கள் கம்பி வலைக்குள் வைக்கப்பட்டுள்ளன.
நேர் எதிரே அகிலமும் ஆளும் அண்டத்தையே தன் காலடியில் அளந்த எம் பெருமான் விஷ்ணு. உலக உருண்டை மீது நிற்பது போல அமைக்கப்பட்டுள்ள கல்சிலையும், பின் இடதுபுறம் கிராமபோன், அதன் அருகே சுமார் 500 வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட பணப்பெட்டியின் மேல் பகுதியில் சம்பா நெல்மணிகள் கொட்டப்பட்ட நிலையில் இருந்த அழகியப் பெட்டியைப் பார்க்கலாம். இந்தச் சம்பா நெல் கெடாமல் இருப்பது ஆச்சரியம்.
அடுத்து ஒரே மரத்தினாலான பணப்பெட்டி, எந்த இணைப்பும் இல்லாமல் மரத்தில் கடைந்து செய்யப்பட்ட அற்புதப் பெட்டியைக் காணலாம்.
100 ஆண்டுகளுக்கு முன்புள்ள ஒற்றை நாக்கு பூட்டு, 850 வருடங்களுக்கு முன்புள்ள இரட்டை தாழ்ப்பாள் பூட்டு, பில்லி, சூனியம் மற்றும் நோய் தீர்க்கும் அரிய மூலிகை, சூட்டுக்கோல், பெண்கள் காலில் போடும் பாடகம், மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் சங்கு , ஆயுதம் , அனகோண்டா போன்ற நீளமான பாம்பு மீது நேபாள மக்கள் அமர்ந்து பாம்பை அடக்குவது போன்று செய்யப்பட்ட அபூர்வக் கம்பி, இரட்டைநாக்குமணி, பல தரப்பட்ட சிமிழ் விளக்கு. மண்ணெண்ணெய் வருவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட விளக்கு டைனோமோ வருவதற்கு முன்பு சைக்கிள் முன்பு பொறுத்தப்பட்ட எரியும் விளக்கு போன்ற அபூர்வ பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.
ஒரு காலத்தில் ஒரு வயதான பெரியவர் ஒருவர் தனது மனைவியுடன் கிராமத்தில் வாழ்ந்து வந்தாராம். ஒரு நாள் சந்தைக்கு சென்றபோது இவரை ஏமாற்றி வியாபாரி கண்ணாடியைக் கையில் கொடுத்து Ôஇது உங்க தாத்தா முகம்Õ தினமும் காலையில் யாருக்கும் தெரியாமல் பார்த்துட்டு வாங்க. நல்லது நடக்கும் என்றாராம். 10 ரூபாய் வாங்கிக் கொண்டு அவரிடம் கொடுத்துவிட்டாராம். தாத்தாவும் அதைத் தனது டிரங்க் பெட்டியில் வைத்துவிட்டு பாட்டிக்குத் தெரியாமல் அதிகாலையிலே எழுந்து பார்த்து வந்தாராம்.
அதில் தாத்தா முகம் தானே தெரியும். தாத்தா தனது முன்னோர் படம் என்று நினைத்து அதைப் பாதுகாத்து வந்தார்.
ஒருநாள் பாட்டிக்குத் தெரியாமல் தாத்தா கண்ணாடிப் பார்ப்பதைப் பாட்டி பார்த்து விட்டார். Ôஎன்ன இழவு இவரு காலையிலே எனக்குத் தெரியாமல் எவள பாக்காருன்னுÕ தாத்தா இல்லாத நேரம் டிரங்கு பெட்டியைத் திறந்து கண்ணாடி எடுத்துப் பார்த்தாள். அங்கு பாட்டியின் முகம் தெரிந்தது. பாட்டி வயதான காலத்தில் அசிங்கமாகத் தானே இருப்பாள். பாட்டிக்குக் கண்ணாடியில் தன் முகம் தானே என்று தெரியாமல்… தாத்தாவிடம், “சீ இந்தக் கிழவி மூஞ்சைப் பார்க்கத்தான் காலையிலே எழுந்து பாக்றீங்களா.. நீர் விளங்கித்தான் போவீரு”… ன்னு கத்தினாளாம்.
இந்த நகைச்சுவைக் கதையில் இருந்து தெரிவது கண்ணாடி, ஒரு காலத்தில் பாமர மக்களுக்குத் அறியாத ஒன்று. அரசவையில் மட்டும் தான் கண்ணாடி இருக்கும். அதுவும் ரச கண்ணாடி. அந்தக் கண்ணாடி மெட்டலும், மூலிகையும் கலந்தது. அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை கண்ணாடிக்கு Ôஆலம்புழா மெரர்Õ என்று பெயர். அதேபோல் கண்ணாடி அத்தாளநல்லூர் அருங்காட்சியகத்தில் உள்ளது.
அந்தக் காலத்தில் அரசர்கள் நாட்டை ஆள போட்டி இருந்தது. ஆகவே அரசர்களுடன் இருப்பவர்களே அரசர்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விடுவார்களோ என்ற பயம் ஆட்கொள்ளும். ஆகவே இது போன்ற பயத்தைப் போக்க அபூர்வத் தண்ணீர் குவளை, மூலிகை மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அதில் தண்ணீர் ஊற்றினால் விஷத்தினை முறித்து விடும். இந்த அதிசய விஷத்தை அகற்றும் மூலிகை தண்ணீர் குவளை அத்தாளநல்லூர் அருங்காட்சியகத்தில் உள்ளது.
தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் நாகரீகம் உள்ளது. இதே போல் அம்பை வட்டாரத்தில் நத்தம் என்னும் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் நாகரீகம் போன்ற வகையில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அதையும் அத்தாள நல்லூர் அருங் காட்சியகத்தில் முருகையா பாண்டியன் வைத்துள்ளார். அதில் கிடைத்த வேல், ஈட்டி, போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
முற்காலத்தில் தற்போது உள்ளது போல் பிரிட்ஜ் எதுவும் கிடையாது. பலகாரங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிக அதிகமான எண்ணிக்கையில் செய்ய வேண்டும். திருவிழா வந்தால் அதிரசம், பணியாரம் போன்ற இனிப்பு பலகாரங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் தயார் செய்வார்கள். அப்படி தயார் செய்த பலகாரங்களைப் பத்திரப்படுத்தவும், கெட்டுப் போகாமல் தடுக்கவும் பலகாரப் பாதுகாப்பு பானை தயார் செய்து உள்ளனர். இது ஒரு இயற்கை பிரிட்ஜ் போன்றவை. இதில் சுமார் 3 மாதம் வரை பலகாரம் கெடாமல் இருக்கும். இந்த அற்புதமான பலகாரப் பானை இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது போக, கல்லால் செய்யப்பட்ட தம்ளர், கல்கும்பா, கல் சந்தன கும்பா, அபூர்வ பூட்டு, மெழுகு மூலம் தயார் செய்யப்பட்ட குடம் ஆகியவை உள்ளது. இப்போது வழக்கத்தில் மறந்து போன அளவை கருவிகளான மரக்கா, பக்கா என்னும் நெல் அளவைகள், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காபி தூள் மிஷின், சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சங்கு, மலை வாழ் மக்கள் பயன்படுத்திய பேரிகை, தேங்காய் எண்ணெய்யில் தண்ணீர் மீது ஊற்றி எரிய வைக்கக் கூடிய கப்பலில் பயன்படுத்த கூடிய அற்புத விளக்கு , பல வகையில் நிறுத்தல் அளவு தராசு, இரட்டை திரி விளக்கு, ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய ஸ்டவ், மரச்சங்கிலியால் ஆன அழகு விளக்கு உட்பட ஏராளமான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.
முருகையா பாண்டியன் சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட நாணயங்களைச் சேர்த்து வைத்துள்ளார். இதில் சேர, சோழ, பாண்டியர். பல்லவர், விஜயநகரப் பேரரசர், நாயக்க மன்னர்கள்,சமய முனிவர் முக உருவக் காலத்து காசுகளும், ராஜராஜன் உருவக் காசு, மீனாட்சி உருவக் காசு, சிவபார்வதி காசு, பெருமாள் காசு, மயில் மேல் முருகன் காசு, காக்கா மீது சனி பகவான் காசு, பசுவின் மடியின் கீழ் சிவலிங்க உருவ காசு, திருமலை நாயக்கர் சதாசிவ ராயர், அய்யப்பன் சங்கு காசு, சக்கர காசு, கருட உருவக் காசு, அனுமான் காசு, புதுப்பேட்டை அம்மன் காசு என மிக அதிகமான காசுகளை இவர் சேர்த்து வைத்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவியும் தி நியூ மெரியாஸ் சொசைட்டி உறுப்பினருமான பார்வராமியாஸ் என்ற வெளிநாட்டுப் பெண் இவரது அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு சந்தோஷத்துடன் தன்னிடம் இருந்த 4 காசுகளையும் கொடுத்து விட்டுச் சென்றாராம்.
தற்போது நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் , முருகையா பாண்டியன் ஆகிய இருவரும் நம்மிடம் இல்லை. ஆனாலும் அவர்கள் விட்டுச்சென்ற அருங்காட்சியகம் நம்மிடம் தாமிரபரணி புகழை பறைச்சாற்றிக்கொண்டே இருக்கிறது.
ஆனாலும் தற்போது இந்த அருங்காட்சியகம் பூட்டியே கிடக்கிறது. மீண்டும் இதை திறந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும். இது எங்களுடைய கோரிக்கையாகவே உள்ளது.
(பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்)


