பிச்சிவிளை ஊராட்சியில் வெற்றிபெற்ற 5 வாா்டு உறுப்பினர்கள் நேற்று ராஜினாமா கடிதம் அளித்ததால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சிவிளை ஊராட்சி தலைவர் பதவி பட்டியல் இன பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 827 வாக்குகள் உள்ள நிலையில் 6 வாக்குகள் மட்டுமே பட்டியல் இனத்தவர் ஓட்டுக்களாம். இதனால், ஊராட்சித் தலைவர் பதவி ஒதுக்கீட்டில் அதிருப்தி இருந்துவந்ததாம். கடந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்குப் பட்டியல் இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போதும் பலர் ஆட்சேபம் தெரிவித்ததால் வாா்டு உறுப்பினர் தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில், பிச்சிவிளை ஊராட்சியில் 6 வாா்டுகளுக்கான உறுப்பினர் பதவிகளுக்குக் கடந்த 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 1ஆவது வாா்டுக்கு வைகுண்டசெல்வி, 2ஆவது வாா்டுக்கு கேசவன், 3ஆவது வாா்டுக்கு நடராஜன், 4ஆவது வாா்டுக்கு சுஜாதா, 5ஆவது வாா்டுக்கு யாக்கோபு, 6ஆவது வாா்டுக்கு பரிமளசெல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றனர். இதில் பரிமள செல்வியின் மகன் இறந்ததால் அவர் மட்டும் பதவியேற்கவில்லை. இந்நிலையில் ஊராட்சி துணைத் தலைவரை தேர்வு செய்யும் பொருட்டு, திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி ஆணையாளர் ராணி, ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தனர். இதனிடையே, வாா்டு உறுப்பினர்கள் திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தைத் தலைவரிடம் வழங்கிவிட்டு வெளியேறி விட்டனர்.
தாமரை மொழி பஞ்சாயத்தில்…
சாத்தான்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட தாமரை மொழி பஞ்சாயத்தில் 6 உறுப்பினர்கள் ஒன்றரை ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் 3 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும் மக்களுக்குக் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என அப்பகுதியின் 3ம் வார்டு சுயம்புகனி மற்றும் 4ம் வார்டு உமா ஆகிய உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்திருக்கிறார்கள்.
குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்களித்த மக்களுக்கு எங்களால் பதிலளிக்க முடியவில்லை. கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம் என சாத்தான்குளம் ஒன்றியம் ஆணையாளர் பாண்டியராஜிடம் தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஆணையாளரும் அந்த ஊராட்சியில் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதாகவும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து அவர்களை அனுப்பிவைத்தார்.
ஆணையாளரான பாண்டிய ராஜ், “பஞ். உறுப்பினர்களின் ராஜினாமா என்றால் அதனை உரிய வகையில் ஊராட்சிமன்றக் கூட்டத்தில் வைத்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி மனுவை அளிக்க வேண்டும். குடிநீர் பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளனர். ஊராட்சிக்குக் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக மக்களுக்குக் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். உறுப்பினர்களின் இந்த ராஜினாமா பரபரப்புக்காகவும் நடத்தப்பட்டது என்கிற மற்றொரு தகவலும் இங்கே பரவி வருகிறது.


