சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேரைப் பொதுமக்கள் பிடித்துப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம், மேல சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கிருபைராஜ் மனைவி புஷ்பலதா (41). இவர் மசாலா நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று வேலைக்குச் செல்வதற்காக இட்டமொழி சாலையில் காமராஜ் நகர் விலக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2பேர் அவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர்.
அவர்களிடம் புஷ்பலதா போராடினார். ஆனாலும் அவர்கள் பலமாக அவரை தாக்கிவிட்டு சங்கிலியைப் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தினர். சுதாரித்துக் கொண்ட புஷ்பலதா போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். சிலர் பைக்கில் வழிப்பறி திருடர்களைத் துரத்தினர். சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தில் வைத்து அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
அதற்குள் மேலும் சிலரும் அங்கு வந்து சேர்ந்தனர். பொதுமக்கள் அந்த 2 திருடர்களுக்கும் தர்ம-அடி கொடுத்து சாத்தான்குளம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறை ஆய்வாளர் பாஸ்கரன் அந்த திருடர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் விஜயநாராயணம் ஆணியன்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் முத்துக்குமார் (38), வல்லநாடு சந்திரன் மகன் ராஜேஷ் (30) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.