தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் பரமன்குறிச்சியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா மற்றும் அனைத்து வகையான கோரிக்கைகளுக்கும் தீர்வு காணும் சிறப்பு முகாமினை கனிமொழி எம்பி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் மற்றும் பரமன்குறிச்சியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா மற்றும் அனைத்து வகையான கோரிக்கைகளுக்கும் தீர்வு காணும் சிறப்பு முகாமினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (22.10.2021) துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். முத்தையாபுரம் மரியா மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், பரமன்குறிச்சி கஸ்பா முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், உடனிருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதல் முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கும் பட்டா மற்றும் அனைத்து வகையான கோரிக்கைகளுக்கும் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார்கள். பொதுமக்களை அலையவிடாமல் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு அலுவலர்கள் சென்று அவர்களுடைய தகுதியான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக இத்தகைய முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வருவாய் பகுதியில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமின் மூலம் முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்.
இந்த முகாமானது டிசம்பர் 31 வரை ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஒவ்வொரு வருவாய் பகுதியிலும் நடைபெறும். இந்த முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை எப்படி தூத்துக்குடி மாவட்டம் சிறப்பாகச் செயல்படுத்தி மக்களைத் தேடி மருத்துவம் சென்றதோ அதுபோல இத்திட்டமும் அனைத்து பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தெரிந்து அறிந்து பயன்பெறும் வகையில் அனைத்து அரசு அதிகாரிகளும் செயல்பட வேண்டும். தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெற்றது.
மற்றும் நாளையும் நடைபெற உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக நீரழிவு நோய், ரத்தக் கொதிப்பு நோய் உள்ளிட்ட உபாதை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா நோய் 3வது அலையிலிருந்து நம்மை மட்டும் அல்லாமல் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு கொரோனா நோய்த் தொற்று பாதித்தாலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். எனவே அனைவரும் இன்றும் மற்றும் நாளை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் ஆணையின்படி தூத்துக்குடி வட்டத்திலே விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முகாம் நடைபெறுகிறது. எல்லா பட்டாவையும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் என்றாலே நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களின் கோரிக்கைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டத்தினை தொடங்கியுள்ளார்கள். நிச்சயமாக தமிழக முதலமைச்சர் நோக்கம் நிறைவேறும். தமிழக முதலமைச்சர் தமிழகத்தை பொருளாதார வளர்ச்சி பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள், டைடில் பார்க் வர இருக்கின்றன. நம்முடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தமுகாமில் கலந்துகொண்டு பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி போட்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் ஆணையின்படி பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலும் பொதுமக்களுடைய குறைகளை முழுமையாகக் களையவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அந்தவகையில் இந்த முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பட்டாவிலே ஏற்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாகவும், முதியோர் தொகையினை தகுதியுடையவர்கள் பெறுவதற்காகவும் பொதுமக்களின் குறைகளைச் சரிசெய்யும் வகையில் தமிழகம் முழுவதும் புதன் கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் எல்லா பஞ்சாயத்துகளிலும் மக்களுடைய குறைகளைக் கேட்கவேண்டும் என்று இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நீங்கள் தருகின்ற மனுக்களை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகளை மாவட்டம் நிர்வாகம், அதுபோல மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து அந்தப்பணிகளைச் செய்வார்கள். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகளைக் கூறி நீங்கள் மனுக்களைத் தாருங்கள் அதனை நிவர்த்தி செய்து தருகின்றோம் என்ற வகையிலே உங்களிடம் மனுக்களைப் பெறுகின்றோம். தேவையான உதவிகளை அரசு செய்து தரும் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் முருகேசன், தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் ஜஸ்டின், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி, ஆனந்தசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


