தமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டுக் கொடுக்கப்போவது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அமித் ஷாவின் தமிழக வருகை கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு அடித்தளமாகச் செயல்படுகிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை நிறுத்தியிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
அனைத்துக் கட்சிகளும் தமிழரின் பெருமையை நிலைநாட்ட துணை நிற்க வேண்டும். தமிழருக்குப் பதிலாக மற்றொருவரை குடியரசு துணைத் தலைவராக வருவதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அத்தகைய அரசியல்வாதிகள் தமிழ் உணர்வு பற்றி பேசுவது அர்த்தமற்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசால் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது என்பதை மக்கள் அறிவர். கச்சத்தீவை மீண்டும் தமிழக மீனவர்களுக்காக மீட்டுக் கொடுக்கப்போவது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் என்றார்.


