விஜய்க்கு அரசியல் ஞானம் இல்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜகவின் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். தமிழக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியா? பொருந்தும் கூட்டணியா என்பது பற்றி விஜய்க்கு என்ன தெரியும். தாமரை மலரப்போவதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார்.
அவருக்கு அரசியல் ஞானம் இல்லை. மாநாட்டை ஒழுங்காகவும், முறையாகவும் நடத்த முடியாதவர் ஆட்சியை மட்டும் ஒழுங்காக நடத்துவாரா? திமுகவினர் நடத்தும் அனைத்தும் பள்ளிகளும் மும்மொழிகள் உள்ளன. தமிழகத்தில் திமுக அரசு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வருகிறது. தமிழக வளர்ச்சிக்கு அனைவரின் பங்களிப்பும் உள்ளது என்றார்.
ஹெச்.ராஜா:
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் முதலில் தமிழக அரசியலை நன்கு கற்க வேண்டும்| அதன்பிறகு வந்து கருத்துக்கூற வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உடனடியாகச் செய்துவிட முடியாது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2014 இல் ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த நிதியை விட 3 மடங்கு நிதியை தமிழகத்துக்குக் கொடுத்திருக்கிறது. இதைப்பற்றி தெரியாமல், பாஜகவை கொள்கை ரீதியாக எதிரி என்கிறார் விஜய்| அவருக்கு என்ன கொள்கை உள்ளது என்பதை முதலில் தெரிவிக்கட்டும். அவசியமின்றி பாஜகவை விஜய் சீண்ட வேண்டாம் என எச்சரிக்கிறேன் என்றார்.
நடிகர் சரத்குமார்:
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாசிசத்தைப் பற்றி பேசும் விஜய்க்கு பாசிசம் என்றால் என்ன என்பது தெரியுமா? இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்| ஆனால், அரசியல் பாடம் கற்றுக்கொண்டு பேச வேண்டும். என்ன பேசுகிறோம். எதற்காக பேசுகிறோம் என்பதை புரிந்து கொண்டு கொள்கை ரீதியாக பேச வேண்டும். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று கூறும் அளவுக்கு விஜய் வளர்ந்துவிடவில்லை என்றார்.


