சாத்தான்குளம் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி கூகுள்பே மூலம் பணம் பறித்த இருவரை போலீஸார் கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் சத்தியநகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தர் மகன் ஜெனிஸ்டர் தங்கப்பாண்டி(25). பி.இ பட்டதாரியான இவர் வேலைவாய்ப்பு தொடர்பாக படித்து வருகிறார். இவர் கடாட்சபுரத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு நேற்று பைக்கில் சென்றாராம். சாத்தான்குளம் அடுத்த ஸ்ரீரங்கநாதபுரம் விலக்கில் சென்றபோது அங்கு இரு பைக்கில் நின்ற 4 மர்மநபர்கள், பைக் பழுதாகியுள்ளது என உதவிகேட்பதுபோல் பேசியுள்ளனர்.
ஜெனிஸ்டர் தங்கப்பாண்டி பைக்கை நிறுத்தி இறங்கியதுடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அப்போது அவர் பணம் இல்லை மறுத்ததையடுத்து மர்மநபர்கள், அவரது செல்போன் கூகுள்பே மூலம் ரூ.2 ஆயிரத்தை தாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணபரிவர்த்தனை செய்யுமாறு மிரட்டியுள்ளனர். இதனால் பயமடைந்த ஜெனிஸ்டர் தங்கப்பாண்டி, மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி சேமிப்பு கணக்கிற்கு ரூ.2 ஆயிரத்தை ஆனுப்பியுள்ளார். இதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி 4பேரும் பைக்கில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜெனிஸ்டர் தங்கப்பாண்டி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயகுமார், வழக்குப்பதிவு செய்தார். போலீசார் விசாரணையில் மர்மநபர்கள் தெரிவித்த வங்கி கணக்கு எண் மூலம், பணம் பறித்துச் சென்றது தொடர்பாக இருவரை பிடித்தனர். அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் பேச்சிக்கண் (21), நம்பிராஜன் மகன் சுடலைக்கண் (20) என தெரியவந்தது. போலீஸார் தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்


