காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் ப்ரைமரி ஊழியர் கூட்டம் தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுக உரை ஆற்றினார்.
இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி. சுஹைல் இப்ராஹீம், மாவட்ட துணைத் தலைவர் அம்பா ஜாஃபர், நகர நிர்வாகிகளான ஏ.ஆர். தாஹா, என்.டீ. அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், காயல்பட்டினம் மண்ணின் மைந்தருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள் : காயல்பட்டினத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் கடந்த காலத்தில் செய்யப்பட்ட வார்டு மறுவரையறையை நீக்கிவிட்டு, ஒட்டுமொத்த ஊர் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் மீண்டும் முறைப்படி வார்டு மறு வரையறையைச் செய்திட வேண்டும்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடை தாழ்ந்த நிலையில் இருப்பதால் பயணிகள் திருச்செந்தூர் சென்று தொடர் வண்டியில் ஏறும் நிலை இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, நடைமேடையை உயர்த்தித் தர வேண்டும். பயணியர் நலன் கருதி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடையை விரைவில் High Level Platform ஆக உயர்த்த வேண்டும்.
காயல்பட்டினம் கடற்கரையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், முழுப் பாதுகாப்போடும் தொடர்ந்து பராமரித்திடவேண்டும். காயல்பட்டினத்தில் போதைப்பொருட்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் சமூக விரோதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


