அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள 3.13 லட்சம் பொது சேவை மையங்களில் சந்தா தொகையை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது 60வது வயது முதல் மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சி.எஸ்.சி இ-கவர்னன்ஸ் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் இதற்கான பணிகள் நடக்கும். இந்த நிறுவனம் 18-40 வயதுக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்யத்துவங்கி உள்ளது. மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள 10 கோடி தொழிலாளர்களை ஐந்தாண்டுகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் நாடு முழுவதும் 3.13 லட்சம் பொது சேவை மையங்களை நடத்தி வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி தங்கள் ஆதார் எண் வங்கி சேமிப்பு கணக்கு எண், ஜன்தன் கணக்கு பாஸ்புக் ஆகியவற்றை காண்பித்து தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்துக்கான முதல் மாத சந்தா தொகையை ரொக்கமாக செலுத்தலாம். அதற்கு ரசீது அளிக்கப்படும்.
18 வயதில் இந்த திட்டத்தில் சேரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சந்தாவாக 55 ரூபாய் செலுத்தவேண்டும். அதற்கு நிகராக தொகையை அவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தும். தொழிலாளர்களின் வயது அதிகரிக்கையில் சந்தா தொகையும் உயரும், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.


