தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர் அர்ஜீன் பிரபாகரன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிற்கு வருகை தந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவன் அர்ஜீன் பிரபாகரனை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தி கௌரவித்தார். அதன்பின்னர் கல்வி உதவித்தொகையாக 10,000 ரூபாய் வழங்கினார்.
தந்தை மறைந்த நிலையில், கல்வியின் மீது நம்பிக்கை வைத்துச் சாதித்திருக்கும், அர்ஜுன் பிரபாகரனை மேன்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவரது தாயார் பண்டாரச்செல்வி அவர்களுக்கும், மாணவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்ட அவர் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வரும் மாணவன் மற்றும் தாயாரிடம் தமிழக அரசு சார்பில் புதிய வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் தன்னார்வலர்கள் குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.


