தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் முத்தையாபுரம் அய்யன் கோவில் பகுதியில் ஏராளமான நிழல் தரும் மரங்கள் உள்ளன. நேற்று மதியம் சாலையோரம் இருந்த பெரிய மரம் ஒன்று, எதிர்பாராத விதமாக வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
தகவலறிந்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மரம் விழுந்ததால் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்களின் உதவியுடன் வேரோடு சாய்ந்த மரத்தின் கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டி அகற்றினர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மரம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரானது.
எப்போதும் வாகனப் போக்குவரத்து மிகுந்த இந்தப் பிரதான சாலையில் மரம் விழுந்த சமயத்தில், அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் ஏதும் அந்தப் புள்ளியைக் கடக்கவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதமும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. எனினும், ஒரு மணி நேரப் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.


