உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை நீக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய விமானப் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய விமானப் பயணிகள் சங்கத் தலைவர் சங்கர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை இன்று (மார்ச் 23, திங்கட்கிழமை) முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திடீர் முடிவால் விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது, இது சாமானியப் பயணிகளைப் பெருமளவில் பாதிக்கும். ஏற்கனவே, எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டிச் சில தனியார் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. தற்போது உச்சவரம்பு நீக்கப்படுவதால், நிறுவனங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் உருவாகும்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையில், பயணிகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துவது முறையல்ல. எனவே, விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்து, பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


