கோவில்பட்டியில் கனமழையினால் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவில்பட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், மாலையில் வானிலை மாறி மேகங்கள் சூழ்ந்தன. மாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை, சுமார் 40 நிமிடங்கள் கனமழையாக நீடித்தது. இந்தத் திடீர் மழையினால் வெப்பம் தணிந்து நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மழையின் காரணமாக, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில், சுவாமி சன்னதி அருகே மழைநீர் பெருமளவில் தேங்கியது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதிதான் இந்தக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், மழைநீர் வெளியேற வழியின்றித் தேங்கியது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக கோவில் உட்பிரகாரத்தில் தேங்கும் நீர் வெளியேறுவதற்கான வடிகால் வழிகள் அனைத்தும், சமீபத்திய திருப்பணிகளின் போது அடைக்கப்பட்டதே இந்த நீர் தேக்கத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேறத் தேவையான நிரந்தர நடவடிக்கைகளைக் கோவில் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


