திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, சுவாமி சிங்கக் கேடயச் சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் பகலில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, தூண்டுகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி தாரசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு வந்தனர். மாலையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) இரவு சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


