தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத்தில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஏராளமானோர் தொடர்ந்து தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து 5 நாட்களாக உணவு வழங்கி வருகிறார்கள். இங்குள்ள மக்கள் தங்களால் இயன்ற பொருள்களை சேகரித்து அரசு இயந்திரம் நுழைய முடியாத இடத்துக்கு கூட சென்று உணவு வழங்கி வந்தனர். இந்த வாலிபர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள் அல்ல- ஆனாலும் அவர்கள் தங்களால் இயன்ற பொருள்களை மக்களிடம் பிரித்து, தாங்களும் வழங்கி இந்த செயலை செய்து வந்தனர். அவர்களை பாராட்டி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சுரண்டை பகுதியைச் சேர்ந்த ஓவியர் சுப முருகன் தங்களது கலாம் அறக்கட்டளை சார்பாக நண்பர்களோடு இணைந்து சுரண்டை மற்றும் கீழச்சுரண்டை பகுதியில் பொருள்களை சேகரித்தார். அந்த பெருள்களை செய்துங்கநல்லூரில் சமைத்து மக்களுக்கு வழங்கும் இளைஞர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். இதற்காக காரில் தாங்கள் சேகரித்த பொருள்களை கொண்டு வர ஏற்பாடு செய்தனர். இவர்கள் செய்துங்கநல்லூர் சந்தையில் சமையல் செய்து கொண்டிருந்த செய்துங்கநல்லூர் வாலிபர்களிடம் தாங்கள் கொண்டு வந்த அரிசி உள்பட பொருள்களை ஒப்படைத்தனர். இந்த பொருள்களை கொண்டு வந்த சேர்மத்துரை, ராமர், ராதாகிருஷ்ணன் ஆகியோரை கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
செய்துங்கநல்லூர் வாலிபர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்து பொன்னாடை போர்த்தினார். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், விவசாய சங்கத்தலைவர் குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வாலிபர்கள் செய்துங்கநல்லூர் ,முத்தாலங்குறிச்சி, ஆழிகுடி, சாமியாத்து, பேரூர், பாராசங்கு நல்லூர் உள்பட குக்கிராமங்களுக்கு போக்குவரத்து இல்லாத இடத்துக்கும் கூட நடந்து சென்று உணவுகளை வழங்கி வருகிறார்கள். இந்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.


