தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வந்தது.
முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் பொருள்களை அதே இடத்தில் கண்ணாடி பேழைகள் மூலம் மூடப்பட்டு சைட் மியூசியமாக அமைத்துள்ளனர்.
இதனை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், ஆய்வு மாணவர்கள் தொடர்ந்து பார்வையிட்டு வந்தனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கன மழையால் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த சைட் மியூசியம் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் சமூக அலுவலர்களும் ஆய்வாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து சைட் மியூசியத்தில் பாதிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை முறையாக கையாண்டு சேதம் அடையாத அளவிற்கு பாதுகாத்து சைட் மியூசியத்தில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி மீண்டும் மியூசியத்தை முறையாக உருவாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் குறித்து நூல்கள் எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் தொடர் மலையாளம் மழை வெள்ளத்தாலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வாளர்கள் முறையாக கையாண்டு பொருட்கள் பாதிக்காத படி விரைவாக சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் காட்சிக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


