தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் நடமாடும் தகன மேடையில் எரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் கடந்த 17ஆம் தேதி கனமழைகள் கோரம்பள்ளம் குளம் உடைந்து நகருக்குள் தண்ணீர் வந்ததால் சுமார் 10 அடி தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மாநகரட்சி சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 32 பேர் பலியாகி உள்ளனர். இதில் 19 பேர் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த உடல்களை புதைக்கவும் எரிக்கவும் முடியவில்லை. தூத்துக்குடி மையவாடிக்குள் 10 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் செல்ல முடியவில்லை.
இதனால் தூத்துக்குடி சேர்ந்த மாஸ் நிறுவனத்தினர் நடமாடும் தகன மேடை மையத்தை உருவாக்கி சடலங்களை தகனம் செய்து வருகின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டு, உறவினர்களிடம் சாம்பல் கொடுக்கப்பட்டுள்ளது. சாலையில் சடலங்களை எரிப்பதால் அந்தப் பகுதி முழுவதும் பிணவாடை வருகிறது. இதனால் அந்த பகுதியில் செல்வதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.


