ஆறுகளில் குளிப்பதை புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கருதினார்கள். அதிலும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பது மிகப்பெரிய புண்ணியம் என்கிறார்கள் சான்றோர்கள். இதனால்தான் “பாயும் ஆற்றில் பரணியில் குளி” என்ற பழமொழி தோன்றியது.
தென்பாண்டி நாட்டுக்கு வாழ்வும் வளமும், பெயரும், புகழும் தருவது இந்தத்தாமிரபரணி ஆறுதான்.
தமிழ்நாட்டில் எத்தனையோ ஆறுகள் ஓடினாலும், அந்த ஆறுகளுக்கு இல்லாத பல தனிச்சிறப்புகள் தாமிரபரணி நதிக்கு உண்டு. ஆம்.. அது தான் கோடையிலும் வற்றாத ஜீவ நதி. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திற்கு குடிதண்ணீர் தரும் அமுதசுரபி.
தமிழகத்தில் உள்ள அனைத்து நதியையும் பாரதியார் புகழ்ந்து பாடியுள்ளார்.
“காவிரி தென்பென்னை பாலாறு & தமிழ்
கண்டதோர் வைகை பொருநை நதி என
மேவிய ஆறு பல ஓடத்திரு
மேனி செழித்த தமிழ்நாடு”
இந்த பாடலில் தாமிரபரணிக்கு தனிச்சிறப்பு உண்டு. பாரதியார் குறிப்பிடும் ஆறுகளில் தாமிரபரணியை தவிர மற்ற ஆறுகள் தமிழ் நாட்டில் உற்பத்தி ஆவது இல்லை.
அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத் தில் உற்பத்தியாகி, ஓடி அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் ஒரே ஜீவநதி தாமிரபரணிதான். நெல்லை மாவட்டத்திலேயே பிறந்து, தவழ்ந்து, நெல்லை மாவட்டத்திலேயே கடலில் கலந்து விடுகிறது. தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் பிரிந்து இருந்தாலும் கூட இதை ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் என்று தான் அனைவரும் சொல்கிறார்கள். இந்த இரு மாவட்டத்தினையும் மக்கள் பிரித்து பார்ப்பதில்லை.
தமிழ்மொழி எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது தாமிரபரணி ஆறு. உலக நாகரிகம் அனைத்தும் ஆற்றங்கரையில் தான் வளர்ந்தது. தமிழர் நாகரிகம் வளர்ந்ததும் தாமிரபரணி கரையில்தான்.


