ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணியில் சங்க கால வாழ் விடப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் திருச்சி மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து 12 நாட்களாக இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 12 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகழாய்வு பணியில் தற்போது வரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு பணியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ் விடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் கூறுகையில்,
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்ட பணியாக அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது 12 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெறும் அகழாய்வு பணி 2004ம் ஆண்டு நடந்த அகழாய்வு பணியை விட முற்றிலும் மாறுபட்டது. மிகவும் நவீன முறையில் கருவிகளைக் கொண்டு இந்த அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் நாங்கள் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்த வாழ் விடப்பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளோம். அந்த இடத்தில் பானைகள், பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டுபிடித்துள்ளோம். இன்னும் தொடர்ந்து நடைபெறும் இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவருடன் தொல்லியல் ஆய்வாளர்கள் அரவாழி, எத்திஸ்குமார், முத்துக்குமார், பொறியாளர் கலைச்செல்வன், உதவியாளர் விக்னேஷ் ,எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்படப் பலர் இருந்தனர்.
இந்த இடத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகளுக்காகப் போடப்பட்டு மழையால் நனையாமல் இருக்க செட் போட்டுப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது எடுக்கப்படும் முதுமக்கள் தாழியை அதே இடத்தில் வைத்து உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதால் ஆதிச்சநல்லூரில் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் இடங்களை டாக்டர் அருண் ராஜ் பார்வையிட்டார்.


