
நெல்லை ஓவியர் பொன் வள்ளி நாயகம் என் வாழ்வில் பல கட்டங்களில் என்னோடு தலைத் தாமிரபரணியிலேயே இவரை சேர்த்திருக்க வேண்டும் . ஏனென்றால் சொந்த ஊர் இவருக்கு வீரவநல்லூர் அருகிலுள்ள வெள்ளங்குளி ஆகும்.
இவர்களின் சாஸ்தா கோயில் இடைத் தாமிரபரணியின் முக்கிய ஊரானதருவையில் அமைந்த அச்சம் தீர்த்தார் கோயில் ஆகும்.
தருவை பற்றிய சில தகவல்களும் அவ்வூர்க்காரர்களான முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி T.S.கிருஷ்ணமூர்த்தி , இசைக்கவி ரமணன் ஆகியோரையும் இவர் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.) தொடக்கப்பள்ளி உயர் நிலைப்பள்ளி படித்ததெல்லாம் வீரவநல்லூரில். பின்பு சேரன்மாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து ஓவிய ஆசிரியர் தகுதியும் முடித்து கலையிலும் கவிதையிலும் செயல் பாட்டிலும் மிக்க பொன் வள்ளிநாயகம் தாமிரபரணி கரையின் தனி ஆளுமையில் வரிசைப் படுத்தப்பட வேண்டியவர். நண்பர் முறப்பநாடு சிற்றம்பலம் மூலமாக அறிமுகமான பொன் வள்ளிநாயகம் திருநெல்வேலி டவுனுக்கு குடிவந்த பிறகு திருநெல்வேலி பகுதிகளை வரையத் தொடங்குகிறார் தாமிரபரணி ஆற்றின் மண்டபங்கள் இவரது ஓவியங்கள் ஆகின்றன.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த நெல் கட்டும் சேவல் பூலித்தேவன் மணிமண்டபத்தில், குமரிமுனை காமராசர் மணிமண்டபத்தில் இவரது ஓவியங்கள் அணி செய்கின்றன
அது போகவும் பாரதி பிறந்த எட்டயபுரம் வீட்டிலும் எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்திலும் பாரதி பயின்ற திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அந்த வகுப்பறையில் வரலாற்றுச் சித்தரங்களையும் தீட்டிய அருமையான கலைஞன்
அந்த பள்ளியின் 150வது ஆண்டு விழாவின் போது தளவாய் இராமசாமி அவர்கள் , சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் , திருநெல் வேலி மேயருமான ஏ.எல்.சுப்பி ரமணியன் ஆகியோர் வரையச் சொல்லி அவ்வகுப்பறையில் சித்திரப்பணி மேற்கொண்டு நாற்றங் கால் என அவ்வகுப்பறைக்குப் பெயர் சூட்டியதும் இவருடைய பணிகளில் முக்கியமானது.
இது மட்டுமல்லாமல் அழிந்து போக உள்ள பழைய பாரம்பரியமான கலைகளையும் அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல முனைப்பும் கொண்டவர் இவரது வழிகாட்டுதலில் இவர் கற்ற தோற்பாவைக் கூத்து ஓவிய பயிற்சி யினை ராஜபாளையம் மாணவிக்கு இவர் தெளிவுறுத்தி அதன் மூலம் அந்த மாணவி தேசிய அளவில் பரிசு பெற்றதும் அந்தக் கலை தேசியப் பட்டியலில் இடம் பெற வைத்ததும் பொன்வள்ளி நாயகத்தின் அரும் பணிகளில் ஒன்று .
அதுபோல தூத்துக்குடி திருநெல்வேலி பகுதிகளின் சுதந்திர தாகத்தினை ஓவியங்களாகவும் இவர் தீட்டி 1908 ஆம் ஆண்டு திருநெல் வேலியில் நடந்த திருநெல்வேலிக் கலகம் என்று அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட நிகழ்வு பின்னாளில் திருநெல்வேலியி எழுச்சி என்று பெயர் மாற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் இவரது ஓவியக் கண்காட்சிகளும் முக்கிய மானவை. கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி. அவர்களின் பெரிய பங்களிப்பான கோரல் மில் போராட்டம், தாமிரபரணி தைப்பூச மண்டப மண்டபத்தில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவா உணர்ச்சி உரையில் தாமிரபரணித் தண்ணீரின் மேல் மக்களை உறுதி எடுத்துக் கொண்டு சுதந்திரப் போராட்டத்திற்கு வ உ சி அழைத்த காட்சிகள் என இவர் வரைந்தது தமிழகம் முழுக்க அன்னாளில் ஆனந்த விகடன் கட்டுரையாக்கி முக்கியத்துவப் படுத்தியது .
பழைய வெளியே தெரியாத அருமையான கலைஞர்களை சுதந்திரப் போராட்டத் தலைவர் களை இவர் ஓவியமாகத் திட்ட தவறுவதில்லை திருநெல்வேலியின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான புத்தகக் கண்காட்சி 2013 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கிய போது அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைவர் சமய மூர்த்தி இ.ஆ.ப அவர்களுடைய அனுமதி யின் பேரில் புத்தகக் கண்காட்சியில் புகைப்பட கண்காட்சி ஓவியக் கண்காட்சி வைப்பதற்கு அடிகோலிய வர்களில், தளம் அமைத்தவர்களில் பொன் வள்ளி நாயகத்தின் பங்கு முக்கியமானது இன்றைக்கு திருநெல்வேலி யில் புத்தகக் கண்காட்சி என்றால் அதில் ஓவியக் கண்காட்சி இடம்பெற்று பல நூறு மாணவர்கள் தங்கள் படங்களை வைப்பதற்கான விதையிட்டு வழி போட்டு தடம் அமைத்த ஆசிரியர் பொன் வள்ளிநாயகம் அவர்களே திருநெல்வேலியில் பல எழுத்தாளர் கள் கலைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு வேலை பார்த்தாலும் இவர் தனது தனித்துவமான பாணியிலே மற்றவர்களுக்கு பல விஷயங்களில் முன்உதாரணமாக உள்ளார் எடுத்துக் காட்டாக எல்லோரும் வரையலாம் எழுதலாம் ஆனால் ஒரு செயலைத் தொடங்கி தொடர்ந்து அது இடைவிடாது செய்யும் பணி என்பது சிலரால் மட்டுமே முடியும் அந்த வகையிலே பள்ளிக்காலத்தில் தொடங்கி 35 வருடங்களுக்கு மேலாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று தெருக்களில் முக்கியமான நூலகங்களில் பொது இடங்களில் திருக்குறளை பெயிண்ட் மூலம் வண்ணத்தில் எழுதி வருவது இவருடைய பெரும் பணியாகும் ஒரு வருடம் செய்துங்கநல்லூரில் எங்கள் தெருவிலும் எனது சொந்த நூலக சுவரிலும் , பொது நூலகத்திலும் வந்து திருக்குறள் எழுதிச் சென்றார். அதுபோல ஒரு வருடம் செய்துங்க நல்லூர் நூலகத்திலும் கூட திருக்குறள் எழுதித் தந்தார்.
தென்குமரிமுனையில் நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் அறப் பீடத்தில் அதிகாரத்திற்கு ஒன்று வீதம் திருக்குறள்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வெட்டுகளாய் அமைக்கும் போது அத் திருக்குறள்களின் வரி வடிவமைப்பை அங்கே தங்கியிருந்து செய்து கொடுத்தாலும் அது பற்றி பெருமை கொள்ளாது தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய முனைபவர். தொடர்ந்து செயல்படுபவர் இவருடைய மாணவர்களும் இதனைப் பின்பற்றி ஆங்காங்கு எழுதி வருகின்றனர்
அதுபோல பழைய மரபு சார்ந்த வீட்டில் வணங்கும் தெய்வ உருவங்களை நாட்டார் மரபுப்படியான நம்பிக்கை சார்ந்த பண்பாட்டு நிகழ்வுகளை சேலைகளில் எழுதும் வரைகலையும் தெரிந்த தமிழகத்தின் வெகு சிலரில் பொன் வள்ளிநாயகமும் ஒருவர்.
இவரை தெய்வ ஓவியர் என்று கூட சொல்லலாம். அதற்கான ஒரு சம்பவம் ஒன்றும் நடந்தது. அந்த சம்பவம் என்ன?
(நதி வற்றாமல் ஓடும்)