தூத்துக்குடி பனிமய மாதா தேர்திருவிழாவை முன்னிட்டு சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போர்கால அடிப்படையில் மழை காலத்திற்கு முன்பு முழுமையாக கால்வாய் மற்றும் புதிய தார்சாலை, பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், உலக பிரதி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் இந்த ஆண்டு தங்கதேர் பவனி வருகிறது.
இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு, தெற்கு காட்டன் ரோடு பழைய மாநகராட்சி முன்பிருந்து தருவை மைதான ரோடு வரை உள்ள பகுதிகளில் தேவையற்றவைகளை அப்புறப்படுத்தி முறையாக தார்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததார்களிடம் நல்லமுறையில் தரமான சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், எடின்டா, ரிக்டா, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


