thanks nelai times and thiru Thamban ji
காணி இன மக்களை பற்றி காணும் முன்பு இந்த பகுதியில் உள்ள காரையாறு அணையை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.
பாணத்தீர்த்தம் செல்வதற்கு வேறு ஒரு பாதை ஒருகாலத்தில் இருந்துள்ளது. அந்தப் பாதை சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே இருந்து சென்றுள்ளது. அந்தப் பாதை தற்போது இல்லை. 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் இந்தப் பாதை முற்றிலும் காணாமல் போனது. பாணத்தீர்த்தத்தின் கீழே தான் பாபநாசம் அணை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து சர்வே செய்தவர் ஆங்கிலேய மாவட்ட ஆட்சித் தலைவர் பக்கிள்துரை.
இவர் ஆர்தர் கோப் லேப் ஏரியை 1937-ல் சர்வே செய்தபோது இங்கு சில வெள்ளைக்காரத்துரைகள் பழத்தோட்டம் போட்டு இருந்தனர். சுமார் 20 சதுர மைல் தூரம் கொண்ட பழத்தோட்ட சொந்தக்காரர்களுக்கு மலைமுகடுகளில் வேறு இடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின் அணைக்கு கர்னல் பிராட், பொறியாளர் கார்டுவர்டு ஆகியோர் வடிவமைத்துக் கட்டிட பணியைத் துவக்கினார்கள். 1938-ம் வருடம் இந்தப் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணிகளுக்கு ஆர்தர் கோப் என்னும் ஆங்கிலேயர் துணையாக இருந்தார். ஆகவே தான் இந்த அணைப்பகுதியை ஆர்தர்கோப்லேப் என அழைத்தார்கள். ஆனால் நாளடைவில் இந்த பெயர் பாபநாசம் மேலணை என்றானது. 1938-ல் ஆரம்பித்த இந்த வேலை 1943-ம் வருடம் முடிவடைந்தது.
இந்த அணையைக் கட்ட தளவாட பொருட்கள் கொண்டு போவதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் ஒன்று அணையின் அருகில் உள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் வேலைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு சென்றனர். ஆனால் தற்சமயம் அந்த பாலத்தின் மேற்பகுதி தளத்தை எடுத்துவிட்டனர்.
பாபநாசம் அணையின் உள்பகுதியில் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்தப் பாதையில் சென்றுதான் அணையில் தண்ணீர் கசிகிறதா? என்று பார்க்கிறார்கள். அணையில் நுணுக்கமான கட்டிடத்தை ஆராய்ச்சி செய்தவர்கள் இன்னும் பல வருடங்களுக்கு எந்தவொரு மராமத்து பணியும் தேவையில்லை என எழுதி வைத்துவிட்டனர். அந்தக் குகைக்குள் நாம் சென்று பார்த்த போது எந்தவொரு நீர்க்கசிவையும் பார்க்க முடியவில்லை.
பாபநாசம் மேலணையில் காரையாறு மற்றும் மயிலாறு சேரும் இடம் கேச்மென்ட் ஏரியா என்று அழைக்கப்படுகிறது. இதில் நீர்பிடிப்பு பகுதிகள் 57.4 சதுர மைல்கள். அணையின் உயரம் 143 அடி. அணையின் நீர்ப்பரப்பு 2.24 சதுர மைல். இது 5 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இங்கு நிறைய முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் மாலை நேரங்களில் கரையில் வந்து பாறை மீது படுத்து கிடக்கும். மான்கள் நீர் குடிக்க கரையில் வந்து நின்று கொண்டிருக்கும். இவை அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
பொதிகைமலையில் அற்புதங்கள் பல இருந்தாலும் கூட ஆபத்துகளும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பழிவாங்கிய தடாகங்கள் உள்ளது. ‘உள்ளூர்க்காரனுக்கு பேய் என்றால் பயம், வெளியூர் காரனுக்கு தண்ணீர் என்றால் பயம்!’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழிக்கேற்ப தண்ணீரில் இறங்கும் வெளியூர்க்காரர்கள் பலியாகி வருகிறார்கள்!
பொதிகைமலையை தூரத்தில் இருந்து பார்த்தால் ரம்மியமாக காட்சி அளிக்கும். பொதிகை மலையில் தாமிரபரணி வெளியே தெரியும் இடத்தில் பாணதீர்த்தம் என்ற ஒரு அருவி உள்ளது. பார்த்தும் ரசிக்கவும், குளிக்கும் இடமாகவும், பார்க்கும் இடமாகவும் இருக்கிறது. 15 கிலோ மீட்டருக்கு மேலாக செடி, கொடிகளுக்கிடையே சூரிய ஒளியே படாமல் ஓடி வந்து வெளியே தெரியும் அருவிதான் பாணதீர்த்தம். இதமான அருவி, இந்த இடத்தில் குளிப்பது புனிதமானது. நோய்த்தீர்க்க வல்லது. சூரிய ஒளியே படாமல் மூலிகையை தன்னகத்தே தாங்கி வெளியே கொட்டுகிறது. வானத்தில் இருந்து விழுவது போல் இது விழுவதால் வாணதீர்த்தம் என்றும் கூறுவர். முதன் முதலில் ஆன்மிக ரீதியாக புண்ணியம் என்றாலும், அறிவியல் ரீதியாக நோய் தீர்க்கும் அபூர்வ மூலிகைள் இடையே பாய்ந்து அருவியாக வந்து கொட்டும் இடம். இந்த இடத்திலும் ஆபத்துகள் காத்துக்கொண்டுதான் இருக்கிறது. திடீரென்று வரும் வெள்ளம் குளித்துக்கொண்டு இருப்பவர்களின் உயிரை பறித்து விடும். அதன்பின்பு, அவர்கள் உடலைக்கூட கண்டுபிடிப்பது என்பது மிகக்கடினம். அந்த உடல் அடித்துச்சென்று அதாள பள்ளத்தில் வைத்துவிடும்.
பாணதீர்த்தம் விழும் இடத்தில் சுமார் 100 அடிக்கு கீழே பெரும் தடாகம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் மரண நீர்ச்சுழல் உள்ளது. சுழலில் மாட்டும் மனிதர்களை இயற்கைக் காட்சியை ஆவலோடு படம் எடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படக்காரர்கள் தடுமாறி விழுந்து பலியாகி விடுகின்றனர். கிருஷ்ணவேணி என்ற பெண், இவ்விடத்தில் விழுந்து இறந்து ஆவியாக இந்த பகுதியில் உலாவி வருவதாக கூறுவார்கள். இந்த பெண் குறித்து நண்பர் எழுத்தாளர் ராஜநாராயணன் எழுதிய ‘கிருஷ்ணவேணி’ என்ற நாவல் விகடன் பிரசுரம் மூலமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாணதீர்த்தம் பகுதியில் அடிக்கடி உயிரை காவு கொடுக்கும் யாத்திரிகர்களைக் காப்பாற்றுவதற்காகவும், தாமிரபரணியில் திடீரென வரும் வெள்ளத்தில் குளிக்கும் பயணிகளை எச்சரிக்கை செய்ய ஒரு காவலாளியை, காவல்துறையினரே நியமித்து இருந்தனர். இவர்களைத் தவிர, படகோட்டிகளும் சீசன் நேரத்தில் இங்கு வந்து ஆனந்தக் குளியல் போடும் வெளியூர் சுற்றுலா பயணிகளை அறிவுறுத்தி வருகின்றனர். பாண தீர்த்தத்தில் வரும் வெள்ளத்தைப் பார்ப்பது அபூர்வமான காட்சியாகும்.
மேகக்கூட்டங்களைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். கருமேகங்கள் சூழ்ந்து பொதிகைமலையில் மழை கொட்டினால் பாணதீர்த்தத்தில் நிற்பவர்களுக்குத் தெரியாது. பாணத்தீர்த்தத்தில் 5 நிமிடத்தில் வெள்ளமாக விழுந்து விடும். இதில் மாட்டிக் கொள்பவர்களை கயிறு கட்டி காப்பாற்றி விடுவார்கள்.
ஒரு காலத்தில் இந்த இடம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக இருந்தது. நான் பல தடவை இங்கு சென்றுள்ளேன். ஆனால் தற்போது படகு பயணம் வனத்துறையினரால் தடை செய்யப்பட்டு விட்டது.
அணை நிரம்பி இருக்கும்போது நாம் செல்லும் படகு பாணதீர்த்தம் அருகில் வரை சென்றுவிடும். வற்றி விட்டால் படகில் இறங்கி பாணதீர்த்தத்திற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பாபநாசம் அணையில் 25 அடி சகதி நிரம்பியிருக்கும். அதனால்தான் 35 அடிக்குக் குறைவாக தண்ணீர் திறக்கக் கூடாது என்று ஒரு விதியை வைத்திருக்கிறார்கள். இந்த 25 அடி சகதியில்தான் முதலைகள் ஜீவிக்கும். சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாணத்தீர்த்தத்துக்கு படகு சவாரி மிகச்சிறப்பாக நடந்தது. இங்கு 24 படகுகள் இருந்தன. இந்த படகுகள் மேலணையில் தீர்த்தத்திற்கு பயணிகளைக்கொண்டு சென்று, பின்னர் அவர்களைப் திருப்பி அழைத்து வரும். இந்த படகுகளில் ஒரு டிரைவர், ஒரு நடத்துனர் என பணிபுரிவார்கள். இவர்கள் பத்திரமாக பயணிகள் திரும்பவும் மேலணைக்குக் கொண்டுவந்து சேர்க்கவும் பணிபுரிந்தார்கள். இவர்களை நம்பி 50 குடும்பங்கள் இருந்தன. விபத்து எதுவும் பயணிகளுக்கு ஏற்படாமல் இருக்க லைப் ஜாக்கெட் (பாதுகாப்பு அணிகலன்) வைத்து இருந்தார்கள்.
இந்தியாவில் எங்குமே இல்லாத ஓர் ஒற்றுமை காரையார் படகோட்டிகளிடம் உண்டு. படகோட்டிகள் தனியார்களாக இருந்தாலும்கூட ஒரே இடத்தில்தான் டிக்கெட் கொடுப்பார்கள். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அனைவரும் சமமாகப் பிரித்துக்கொள்வார்கள். அணையில் 144 அடி தண்ணீர் இருந்தால் பாணதீர்த்தம் வரை நீர் நிரம்பி இருக்கும். அந்த நேரம் படகு சவாரி கிடையாது.
18.06.2003 அன்று முதன்முதலில் நான் படகில் பயணித்தேன். நான் சென்ற போது ஒரளவு தண்ணீர் இருந்தது. இதனால் படகோட்டிகள் படகை இயக்கி வந்தனர். அவர்கள் எங்களை படகில் ஏற்றிக்கொண்டு பாணதீர்த்தம் சென்றனர். படகோட்டிகள் தூரத்தில் தெரியும் மரங்களை யானைகுத்தி, குதிரைகுத்தி என்று செல்லமாக அழைக்கிறார்கள். அந்த மரங்கள் 27-வது அடியின்மேலே தெரிந்துபோது நம் கண்களுக்குச் சிறிய குச்சிகள்போல் தெரிந்தன. ஒரு சில இடங்களில் முதலைகள் காற்று வாங்குவதற்காக அதன் மேலே படுத்துக்கிடந்தன. அந்தவேளையில் லேசாக மழைத் தூறலும் விழுந்துகொண்டிருந்தது. தூரத்தில் வெண்ணிற அருவியாக பாணதீர்த்தம் தெரிந்தது. அந்த சமயத்தில் அந்த இடம் எனக்கு சொர்க்கலோகமாகவே இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலாவே இல்லை என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு இந்த அற்புதமான இடம், படகு சவாரி போன்றவைகள் தெரியாது. கிட்டத்தட்ட அரை மணிநேரம் பயணித்தபிறகு படகில் இருந்து இறங்கி மலை வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து தான் பாணதீர்த்தம் சென்றடைந்தோம். பாண தீர்த்தத்தில் படகோட்டிகள் பிள்ளையார் கோயிலில் நடத்திய பூஜையில் நானும் கலந்து கொண்டேன். தாயைப்போல மணப்பெண் வேண்டும் என்று பிள்ளையார் குளத்துக்கரை, ஆற்றங்கரையில் அமர்ந்து பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகவே இன்று வரை பிள்ளையார் நதிக்கரையில் பெண்ணைத்தேடிக்கொண்டுதான் இருக்கிறார். மணமுடிக்கவில்லை. என்று தான் நமது பகுதியில் பேசிக்கொண்டிருக்கிறோம்.
வடநாட்டில், பிள்ளையாருக்கு இரண்டு மனைவிகள் உண்டு என்ற ஒரு வரலாறு உண்டு. ஒருவர் சித்தி, மற்றொருவர் புத்தி. விநாயகருக்குக் குழந்தை உண்டு. அவர் பெயர் லாபம். இது எதை உணர்த்துகிறது என்றால் ஒருவருக்கு சித்தியும் புத்தியும் நன்றாக இருந்தால்தான் லாபம் கிடைக்கும் என்பதுதான். ஆகவே பாணதீர்த்தத்தில் உள்ள சித்தி புத்தி விநாயகரை வணங்கினால் நமக்கு லாபம் கிடைக்கும். நமது தமிழ்க் கடவுள் முருகனோ பிரம்மச்சாரியாக, ஆண்டியாக வடநாட்டு மக்கள் வணங்கி வருகின்றனர். ஆனால், தென்னாட்டைப் பொறுத்த வரை முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்க, விநாயகப் பெருமான் பிரம்மச்சாரியாக உள்ளார். ஆனால், பாணதீர்த்தம் அருகில் சித்தி, புத்தி என்ற இரு மனைவிகளுடன் ‘சித்தி புத்தி விநாயகர்’ என்ற பெயரில் மிக அற்புதமாகக் காட்சி அளிக்கிறார் நமது பிள்ளையார். சித்தி புத்தி விநாயகரை வணங்கித்தான் மேலணை படகோட்டிகள் படகை இயக்கத் தொடங்குகிறார்கள். காற்று அடிக்கும் காலங்களில் படகு சவாரி அற்புதமாக நடைபெறும். குறிப்பாக அணையில் வரும் அலையை படகு கடக்கும்போது, தண்ணீர் பயணிகள் மீது வீசி அடிக்கும். இதை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரசித்து மகிழ்வார்கள். பாணதீர்த்தம் நம்மை அப்படியே கவர்ந்திழுக்கும். உள்ளே போய் குளிப்பவர்களைப் பிடிவாதமாகத்தான் வெளியே இழுத்துக்கொண்டு வருவார்கள். இவையெல்லாம் தற்போது நம்மால் ரசிக்க முடியாத ஒன்றாக மாறி விட்டது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
அதன்பிறகு சுமார் 10 தடவைக்கு மேல் நான் பாணதீர்த்தம் பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வடிவத்தில் இயற்கை அன்னை நமக்கு காட்சி தருவாள். ஆனால் தற்போது இந்த படகு போக்குவரத்தை வனத்துறையினர் நிறுத்தி விட்டனர். எனவே இக்கால மக்கள் அந்த படகு சவாரியை ரசிக்க முடியவில்லை. இந்த படங்களை பார்த்து தான் தாமிரபரணியில் இப்படியரு படகு சவாரி இருந்துள்ளது என்பதை அறியமுடியும்.
இதை போல் தாமிரபரணி தோன்றும் இடத்தில் மறந்தவை பல. அதில் காணிகளின் வாழ்வியலும் ஒன்று. இவர்களை பற்றிய விவரங்களை அறிவோம்.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


