ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்திலுள்ள 18வார்டுகளையும் சேர்ந்த பொதுமக்களுக்கு தாமிரபரணி ஆற்றின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
டவுன் பஞ்சாயத்திற்கான குடிதண்ணீர் அணையின் உட்பகுதிகளிலுள உறைகிணறுகளில் இருந்து பம்பிங் செய்யப்பட்டு அங்கிருந்து தெப்பக்களத்தெரு மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு நவீன சுத்திகரிப்பு இயந்திரம் மூலமாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குளோரின் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக டவுன் பஞ்சாயத்து பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் தாமிரபரணி ஆற்று தண்ணீரானது பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் வழங்கப்படுவதாகவும், அந்த தண்ணீர் குடிப்பதற்கு இயலாத வகையில் சகதி கலந்த துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பாத்திரங்களில் அதன் அடியில் சகதி, மணல் கழிவுகள் அப்படியே படிந்து விடுகிறது. இதனால், இந்த குடிநீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் விலை கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி குடித்து வருகின்றனர்.
சுத்தமான, சுகாதாரமான தண்ணீர் வழங்கிடுவதுடன், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் உட்பகுதிகளில் பச்சை நிறத்திலான தாமிரபரணி ஆற்று தண்ணீரை வெளியேற்றிட டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அணைக்கட்டில் தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறியது எதனால் என்று தெரியவில்லை. பொதுமக்கள் தெரிவித்துவரும் புகாரின் அடிப்படையில் அணைக்கட்டின் உட்பகுதிகளில் பச்சை கலரில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்றிடுமாறு பொதுப்பணித்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளோம். பொதுமக்களுக்கு ஆற்றின் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தான் வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளனர்.