ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது அந்நாட்டின் நீர்வளமும்,நிலவளமும் தான். உலகில் எந்த ஒன்றிற்கும் மாற்று இருக்கிறது.நீருக்கு மட்டுமே மாற்று இல்லை.நீர் வளத்தை உற்பத்தி செய்ய முடியாது.
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லானும் நாட்டிற்கு உறுப்பு”
மழையினால் கிடைக்கும் நீரும்,நிலத்தடியில் கிடைக்கும் நீரும், அதற்குத் தக்கவாறு அமைந்த மலையும்,அம்மலையிலிருந்து ஆறாக பெருகிவரும் நீர்வளமும் நாட்டிற்கு முக்கிய உறுப்புகள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கடல் நீர் சூரியவெப்பத்தால் ஆவியாகி.மேகமாக வான் நோக்கிச்சென்று
பின் அதுவே மழையாகப் பொழிகிறது. ஆறுகளில் ஓடி மீண்டும் கடலில் கலக்கிறது.இதற்கு நீரியல் சுழற்சி என்று பெயர். நீரின் மூலம் தாவரங்கள் வளர்ந்து அதன் மூலம் நாமும் வாழ்கிறோம். உலகின் நாகரீகங்கள் அனைத்தும் நதிக்கரைகளில் உருவானவையே.
இந்த பூமி தோன்றி 460 கோடி வருடம் ஆகிவிட்டதாக விஞ்ஞானம் கூறுகிறது. பூமியின் மொத்தப்பரப்பு 31.51 கோடி சதுர கிலோ மீட்டர். இந்தியத் துணைக் கண்டத்தின் மொத்த பூகோளப்பரப்பு 32 லட்சம் சதுர கிலோ மீட்டர்.தமிழகத்தின் மொத்தப்பரப்பு 1,30,058 சதுர கிலோ மீட்டர்.
பூமியின் மொத்தப்பரப்பில் முக்கால் பங்கு 4 கிலோமீட்டர் ஆழத்திற்கு தண்ணீரால் சூழ்ந்துள்ளது. நீரில் 97.2 % உப்பு நீராக கடலில் உள்ளது.2.15 % பனிக்கட்டியாக வட மற்றும் தென் துருவங்களில் உறைந்து கிடக்கிறது.மீதமுள்ள நீரில் 0.6 % நிலத்தடி நீராக பூமிக்கடியில் தேக்கிவைக்கப்பட்டிருக்கிறது.
0.01 % நீர் ஏரிகள்,குளங்கள்,மற்றும் நீர்த்தேக்கங்களில் இருக்கிற மேற்பரப்பு நீராகும்.இது உலக நீர்வளம் குறித்த சிறிய குறிப்பு.
உலகில் நீரின் அளவு பல ஆண்டுக்காலமாக மாறாமல் உள்ளது .ஆனால் நீரைப் பயன்படுத்தும் அளவு நாளுக்குநாள் மாறிக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகை பெருக்கம் நாளுக்குநாள் பெருகிவருகிறது.ஆனால் தேவைக்கேற்ற நீரின் அளவு உயர்வதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதனுக்கு அனைத்து தேவைகளுக்கும் சேர்த்து 150 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. “குடிமகன்”களுக்கு கூடுதலாக 100 மில்லி முதல் 1 லிட்டர் வரைத் தேவைப்படலாம்.
நமது உடல் எடையில் 70 % நீர் தான்.
இந்தியாவில் குறைந்தபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் வருடத்திற்கு 100 மில்லிமீட்டர் மழை பெய்யும். அதிகபட்சமாக மேகாலயாவின் சிரபுஞ்சியில் 10,000 மில்லிமீட்டர் மழை பெய்கிறது.மில்லிமீட்டர் என்பது மழை நீர் மண்ணுக்குள் தேங்காமல் நிற்பதன் அளவே.
இந்திய மண்ணில் விழும் மழை அளவு 40,000 கோடி கன மீட்டர்.இதில் 11,220 கோடி கன மீட்டர் நீரே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. தமிழகத்தில் ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் 50.1 மில்லிமீட்டரும்,மார்ச் முதல் மே வரை 139.1 மில்லிமீட்டரும்
ஜூன் முதல் செப்டம்பர்வரை தென்மேற்கு பருவக்காற்று மூலம் 308.4 மில்லிமீட்டரும்,அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்று மூலம் 447.4 மில்லிமீட்டரும்,மொத்தமாக வருடத்திற்கு 945 மில்லிமீட்டர் மழை தமிழகத்தில் பெய்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவிலேயே ராஜஸ்தானுக்கு அடுத்து குறைவான மழை நீர் கிடைப்பது தமிழ்நாட்டில் தான். ராஜஸ்தானில் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர மட்டுமே ஒருவர் இரண்டு மூன்று திருமணங்கள் செய்கிறார். இவர்களுக்கு ” தண்ணீர் மனைவிகள்” என்று பெயர்.
நீரின் இருப்பைத் தெரிந்து கொள்ள பல்வேறு அளவு முறைகள் உள்ளன. லிட்டர்,மில்லிமீட்டர்,கனஅடி,கனமீட்டர்,மில்லியன் கனஅடி,டிஎம்சி என அழைக்கிறார்கள்.
மழை நீரை மண்ணுக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினால் அது எத்தனை மில்லிமீட்டர் உயரத்திற்கு தேங்கி நிற்கிறதோ,மழையளவு அத்தனை மில்லிமீட்டர் என்கிறார்கள்.
ஆறுகள்,கால்வாய்களில் ஓடும் நீரைக் குறிக்க கன அடி,கன மீட்டர் என்ற அளவு பயன்படுத்துகிறார்கள்.ஒரு கனஅடி என்பது 1 அடிநீளம்,1 அடி அகலம்,1 அடி உயரம் உள்ள பெட்டியின் கொள்ளளவுதான் ஒரு கனஅடி.1 கனஅடி கொள்ளளவு என்பது லிட்டர் கணக்கில் 28.3 லிட்டர் ஆகும்.
எவ்வளவு நேரம் தண்ணீர் ஓடியது என்று அறிந்தால்,எத்தனை கனஅடி ஓடியது என்று சொல்லிவிடலாம்.ஒரு வினாடிக்கு ஒரு கனஅடி பாய்ந்தால் ஒரு நாளைக்கு 86,400 கனஅடி பாயும். அணைகளில் உள்ள நீரை மில்லியன் கனஅடி என்கிறார்கள்.ஒரு மில்லியன் கனஅடி என்பது 10 லட்சம் கனஅடியாகும்.பெரிய நீர் தேக்கங்களில் உள்ள நீரின் அளவிற்கு TMC என்கிறார்கள்.
TMC என்றால் ஆயிரம் மில்லியன் அல்லது 100 கோடி கனஅடி ஆகும்.
Thousand Million Cubic Feet என்பதன் ஆங்கிலச்சுருக்கமே TMC என்பது.
எத்தனை கணக்குப்போட்டாலும் அபாய அறிவிப்பு அடுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு ஆண்டின் சராசரி மழையளவு 945 மில்லி மீட்டர். ஆண்டு முழுவதும் ஒரு சாண் உயரமுள்ள நெற்பயிர் உறிஞ்சி வெளியிடும் நீர் செலவு 1840 மில்லி லிட்டர் ஆகும். வீட்டு உபயோகம், பாசனம், எரிசக்தி, தொழிற்சாலை இன்னும் பல தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2030 ம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து உபயோகத்திற்குமான நீரின் தேவை 3000 கன கி்மீட்டர்.இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் 2 லட்சம் கிராமங்களுக்கு போதிய நீர்வசதி ஏற்படுத்தப்படவில்லை என்கிறது புள்ளி விபர ஆய்வுகள்.
தமிழ்நாட்டில் 33 பெரிய நதிப்படுகைகளும்,39,000 ஏரிகளும்,75 நீர்த்தேக்கங்களும் உள்ளன.இதன் கொள்ளளவு 625 TMC.கிடைக்கும் மழை அளவு 830 TMCயும்,அண்டை மாநிலங்களிலிருந்து வரும் 430 TMC யும் சேர்த்து 1260 TMC கிடைக்கிறது.
ஒரு மனிதனுக்கான ஒரு நாளைய நீர் தேவை 150 லிட்டர்.இதை 7 கோடியால் பெருக்குங்கள்.அதன் பிறகு விவசாயம்,தொழிற்சாலை ஆகியவற்றின் தேவையைக் கணக்கிட்டால்,கிடைப்பதில் பாதி கூட தேறாது.150 லிட்டர் தேவையுள்ள மனிதனுக்கு 26 லிட்டர் மட்டுமே தமிழகத்தில் கிடைக்கிறது. நமக்கு மழை பெய்தால் மட்டுமே நீர்.
“இறையும் பொறையும் மணந்த தலைய
எண்ணான் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர் சிறுகுளம்”-புறநானூறு 118-1-3.
பண்டைய கால அரசர்கள் நீருக்காகக் குளங்களை வெட்டினார்கள். குளத்தைச் சுற்றி நீர் ஆவியாகாமல் தடுக்க மரங்களை நட்டனர். இக்கால இளவரசர்கள் ஏரி,குளங்களை வரைபடத்திலேயே இல்லாமல் ஆக்கிவிட்டனர்.
ஏரி,குளங்களை ஆக்கிரமிப்பது தவறு என சில நேரங்களில் தீர்ப்புச் சொல்லும் மதுரை உயர்நீதிமன்றமும் கூட உத்தங்குடி குளத்தை அழித்து உருவானது தான்.
நீர் வளங்களை அழிக்கும் செயலுக்கு ஆட்சியாளர்கள் துணை போகக்கூடாது. நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் வியாபாரம் நடத்தும் தண்ணீர் கொள்ளையர்கள்.பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகளான கோக்-பெப்சியின் கோரத்தாண்டவம். ஏரி, குளங்களை ஏப்பம் விடும் ரியல் எஸ்டேட் ஃபோர்சரிகள். காடுகளை கட்டாந்தரைகளாக்கும் கயவர்கள். ஆற்றில் கழிவுகளைக் கொட்டும் ஆலை முதலாளிகள்.இவர்களுக்கு இடைவிடாத ஈடு கொடுக்கும் மணல் கொள்ளையர்கள்.
மணல் எனச் சாதாரணமாக கடந்து போகிறோம். மண் என்பது என்ன? பெல்ஸ்பார் தாது உப்பு 48%, குவார்ட்ஸ் தாது உப்பு 36%, மைக்கா தாது உப்பு 10%, சுண்ணாம்புக்கல் 2%, ஆர்ன்ப்ளென்ட் மற்றும் ஆக்சைட் 1%, ஒலிவைன் மற்றும் ஷெர்பன்டைன் 1%, களிமண் 1%, பிறதாதுக்கள் 1% இணைந்த கலவையே மண்.
விளங்கச் சொன்னால் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மக்னீசியம், சல்பர், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு,தாமிரம், வெங்காரம்,மாலிப்டினம், குளோரின் ஆகிய ஊட்டச்சத்துகள் கொண்டதே மண். இத்தனையும் இணைந்த மண் படிமங்கள் உருவாக 200 ஆண்டுகள் ஆகும்.
மண்ணிலுள்ள அங்கக கரிமச்சத்து நுண் உயிரிகளான பாக்டீரியாக்கள், பூஞ்சாளங்கள் நீடித்து செயல்பட உணவாக உள்ளது. இந்த பாக்டீரியாக்களும், பூஞ்சாளங்களும் தான் கடினமான, இறுகிய தன்மை கொண்ட நீரை செறிவூட்டி இனிமையாக்குகிறது. ஆற்று நீர் இனிமையாக இருப்பதன் காரணம் இதுதான். இது ஏதுமறியா அறிவிலிகளின் அணிவகுப்பு தான் ஆற்று மணல் கொள்ளையடிப்பு.
நதிக்கரைகளில் வளர்ந்த நாகரீகம் அநாகரிகமாக சென்று கொண்டிருக்கிறது. நதியில் விளையாடி கொடியில் தலைசீவிய தலைமுறை தண்ணீர் இன்றி தத்தளிக்கிறது.
அய்யன் வள்ளுவர் சொன்னதை உரக்கச் சொல்லுங்கள். நீரின்றி அமையாது உலகு.
சூர்யா சேவியர் வரலாற்று ஆய்வாளர் எழுதிய கட்டுரை
22-03-22


