திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி மகன் ஜெயபால் (40). இவருக்கு பாலசுதா என்ற மனைவியும், இஷானி என்ற 11 வயது மகளும், நிஷாந்த் என்ற 8 வயது மகனும் உள்ளனர். ஜெயபால் கூலி வேலை செய்து வருகிறார்.
ஜெயபால் கந்தபுரம் பகுதியை சேர்ந்த சிவபெருமாளிடம் நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவபெருமானின் தம்பி மோகன் நேற்று காலை ஜெயபாலை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாத நிலையில் அங்கிருந்து திரும்பியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கந்தபுரம் பகுதியில் ஜெயபால் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சிவபெருமாளின் தம்பி மோகன் வந்துள்ளார். அங்கு வந்த மோகன் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
போதையில் இருந்த மோகன் ஜெயபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயபாலை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜெயபால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஜெயபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


