தூத்துக்குடியில் மீனவரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் செந்தூரப்பாண்டி மகன் தங்கராஜ் (21), மீனவரான இவர் தற்போது தாளமுத்து நகர், தாய் நகரில் வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு செல்லாமல் கிரேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தி வைத்திருக்கும் நாட்டுப் படகுகளில் இரவு படுத்து தூங்குவது வழக்கமாம்.
நேற்று இரவு இவர் நாட்டுப் படகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏஎஸ்பி மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த 4 தினங்களில் 3 கொலைகள் நடந்துள்ளது. சாயர்புரம் அருகே இளம்பெண் தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார் நேற்று முன்தினம் கப்பல் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


