
தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி மாநகராட்சி எல்கைக்கு மிக அருகில் உள்ள புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி ஆர்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில் தூத்துக்குடி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டோல்கேட் விதிமுறைகளை மீறி தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு மிக அருகில் உள்ளது. இந்த டோல்கேட் அமைக்கப்பட வேண்டிய இடம் வாலசமுத்திரம் கிராமம் ஆகும்.
ஆனால், கிழக்கு கடற்கரை சாலை வாகனங்களை குறிவைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை, குளத்தூர் போன்ற கிராமங்களுக்கு செல்பவர்கள் தொடர்ந்து பணத்தை விரயமாக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள வாகன உரிமையாளர்கள், வாடகை கார்கள், கனரக வாகனங்கள் மாத கட்டணம் செலுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. ஒருமுறை ஆதார் மற்றும் ஆர்சி புக் போட்டோ உள்ளிட்டவைகளை கொடுத்து பதிவு செய்துவிட்டால் ஓராண்டு முழுவதும் ஆன்லைன் மூலம் மாதாந்திர பாஸ் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது. எனவே டோல்கேட்டை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அந்த இடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை டோல் கட்டணம் வசூல் செய்ய தடை செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.” இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.