திருநெல்வேலி – எழும்பூர், பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயில்கள் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டால் கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ மனு அளித்தார்.
அவர் அளி்த்துள்ள மனு விவரம்: கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதை, கடம்பூர்- சங்கரப்பேரி சாலையில் இருப்பு பாதைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஆகியவற்றில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற தானியங்கி மோட்டார், சுரங்கப் பாதையின் இருபுறமும் மேற்கூரை ஆகியவை அமைக்க வேண்டும்.
கரோனா காலத்துக்குப் பின், கடம்பூர் ரயில் நிலையத்தில் அனந்தபுரி விரைவு ரயில் (16723), கோவை- நாகர்கோவில் விரைவு ரயில் (22668) ஆகியவை நிற்காமல் செல்கின்றன. அந்த ரயில்களும், குருவாயூர் விரைவு ரயில் (16127), அந்தியோதயா விரைவு ரயில் (16191) ஆகிய ரயில்களும் கடம்பூர் நிலையத்தில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கக வேண்டும்.
தற்போது இயங்கும் திருநெல்வேலி – சென்னை – எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20665 – 20666), பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயில் (20672) திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டால் அந்த ரயில் ஆகியவற்றுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டும். கடம்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே கேட் செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
கடம்பூர் -கே. சிதம்பரபுரம் சாலையில் உருவாக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மீது சிறிய பாலம் அமைத்தால் மக்கள் எளிதாக சென்று வர முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. மனு அளித்தபோது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.


