தூத்துக்குடியில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் செயினை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மனைவி கவிதா (35). இவர் நேற்று இரவு தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ஜவுளிக் கடையில் தீபாவளிக்கு ஜவுளி வாங்கிவிட்டு ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். டூவிபுரம் 3வது தெருவில் சென்று கொண்டிருந்த போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். தீபாவளிக்கு ஜவுளி வாங்கிவிட்டு சென்றபோது பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


