எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 47 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், இந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 47 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு ஆணைகளையும், நில அளவைப் பிரிவு மூலம் பட்டா உட்பிரிவு ஆணைகளையும் வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 11.06.2024 முதல் 14.06.2024 வரை மற்றும் 18.06.2024 முதல் 21.06.2024 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம்.
தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனைப்பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.
அந்த வகையில், எட்டயபுரம் வட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடைசி நாளான இன்று(21.06.2024) வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், எட்டயபுரம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


