நரசிங்கநல்லூர் தாமிரபரணி கரையில் கருங்காடு அருகே உள்ள கிராமம். இந்த ஊருக்கு டவுண் பேட்டை வழியாக ரயில்வே கேட்டை தாண்டி வந்தால் அடைந்துவிடலாம். சிறிய ஊர் தான் ஆனால் அழகான ஊர். கோடைக்கு நல்ல கோடகன் கால்வாய் பாயும் அற்புத ஊர். இந்த ஊரில் நரசிங்க நல்லூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது.
இந்த கோயிலை பொருத்த வரை வராத கடன் தொல்லையா? உரிய வயது எட்டியும் மாங்கல்ய யோகம் அமைய வில்லையா? இனிய இல்லறம் புகுந்தும் வீட்டில் மழலைச் சத்தம் கேட்கவில்லையா? படித்துப் பல வருடங்கள் கடந்த பின்னும் வேலை கிட்டவில்லையா?
இப்படி, உங்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும், அதைக் களைந்து, நற்பலன் அளிப்பதற் காகவே தலங்கள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருளும் நாராயணன், பிரசன்ன வெங்கடா ஜலபதி என்ற திருநாமத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம்.
சுமார் பழம் பெருமை மிக்க இவ்வூர் அக்காலத்தில் மேலவேம்ப நாடு எனும் உள்நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. இங்கு தாமிர பரணியின் வடகரையில் பிற்காலப் பாண்டியர் காலத்தில், அதாவது கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கிழக்குப் பார்த்த வண்ணம் நாலாபுறமும் உயர்ந்த திருமதில் சூழக் கற்றளியாக உருவாக்கப்பட்டுள்ளது இக்கோயில்.
பிரதான வாசல் தாண்டியதும் வசந்த மண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்கிற கட்டமைப்பில் பாண்டியர் கலைப்பாணியில் அதியற்புதமான சிற்பத் தூண்களுடன் கோயில் காட்சியளிக்கிறது.
வசந்த மண்டபத்தில் பெரிய திருவடி சந்நதியும், மகாமண்டபத்தில் விஷ்வக்சேனர் சந்நதியும் உள்ளன. வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காணமுடியாத காட்சியாக, மகாமண்டப வடசுவரில் ரிஷப வாகனத்தில் பரமசிவன், பார்வதி எழுந்தருளும் சிற்பம் வெகு அற்புதமாகக் காணப்படுகிறது. ஒரு பக்கத்தில் லிங்கேஸ்வரரும், விநாயகரும் காட்சியளிப்பது அழகு.
அர்த்தமண்டபத்தில் அழகிய தாமரை இதழ் மீது ஸ்ரீஹரிபாதம் அமைந்துள்ளது. நாளும் தங்களது மனதை வாட்டி வதைக்கும் பிரச்னைக்குத் தீர்வு வேண்டி இங்கு நாடிவரும் சேவார்த்திகள், ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி வெற்றிலை, பாக்கு மற்றும் ஒன்பது அச்சு வெல்லம் வைத்து, இரு தேங்காய் மூடிகளில் தீபம் ஏற்றி தங்களது பிரச்சனை நீங்க இந்த ஸ்ரீஹரிபாதத்திற்கு அர்ச்சனை செய்து வணங்குகிறார்கள். இவ்வாறு பிரார்த்தனை செய்து முடித்த சில வாரங்களிலேயே அவர்கள் கோரிக்கை நிறைவேறிவிடுகிறதாம். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் மழலை பாக்கியம் கேட்டு வருவதால், குழந்தை பிறந்தவுடன் கோயிலுக்கு வந்து தவிடு, கருப்பட்டி ஆகியவற் றைக் கொடுப்பதோடு, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வைத்து மகிழ்கிறார்கள். அதோடு, கிருஷ்ணர் சிற்பங்களை நேர்த்திக் கடனாகச் செலுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
கோயிலின் தெற்கு மதில்சுவரிலும் உள்சுற்றிலும் இத்தகைய சிற்பங்கள் ஏராளமாக இருப்பதைப் பார்க்கும் போது, காலம் காலமாக ஒரு பரிகாரத்தலமாக இது நம்பிக்கை யோடு வணங்கப்பட்டு வருவது புலனாகிறது. திருவோண நட்சத்திரக் காரர்கள் தங்கள் குடும்பம் செழிக்க இத்தல பெருமாளை சேவித்துச் செல்வது மிகவும் நல்லது என்கிறார் கள். உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், தங்கள் வீட்டு சுபகாரியங்களைச் செய்வதற்கு முன் இந்த ஸ்ரீஹரிபாத தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள் ளனர்.
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தன்னை வணங்குவோரின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் வரப்பிரசாதியாம் இவர். கோயில் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகளாக நரசிங்கப் பெருமாளே மூலவராக வணங்கப் பட்டதாகவும், அதனாலே ஊரும் நரசிங்கநல்லூர் என அழைக்கப் படுவதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு காலகட்டத்தில் கோயில் மராமத்து செய்யப்பட்ட வேளையில், மூலக் கருவறை, அர்த்த. மண்டபக்கட்டுமானத்தையே பிரித்து மாற்றி மாற்றி அமைத்துள்ளனர். அந்த சமயத்தில்தான், இப்போதுள்ள மூலவரை புதியதாக பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆதி மூலவர் இப்போது வழிபாட்டில் இல்லை. வழக்கமாக தேவகோட்டத்தைச் சுற்றி அமைந்திருக்கும் மகர தோரண வேலைப்பாடு தூண்கள் தற்போது மகாமண்டபச் சுவர்களில் காணப்படுகின்றன.
மேலும் கண்டம், முப்பட்டை, ஜகதி போன்ற அதிஷ்டானப் பகுதியில் அமைந்த பிற்காலப் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் யாவும் வெவ்வேறு இடங்களில் துண்டுதுண்டாக, தொடர்ச்சியாக இல்லாமல் தனித்தனியே காணப் படுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதியவை மற்றும் சிற்பத் தூண்களை வைத்துப் பார்க் கையில் இது பிற்காலப் பாண்டியர் காலமான கி.பி. 12-13ஆம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தது என்பதைத் தீர்மானிக்க முடிகிறது.
மூலவர் விமானம் வேசர வடிவில் அமைந்துள்ளது. தினமும் வைகானஸ் ஆகம் விதிப்படி மூன்று கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. பரிகார வேண்டுதலுக்காக வெளியூர் சேவார்த்திகள் அதிகமாக இங்கு வந்து செல்வதைப் பார்க்கமுடிகிறது. ஒரு காலகட்டத்தில் தாமிரபரணியில் தீர்த்தமாடிய பின்பு இப்பெருமாளை சேவித்து, அருகே உள்ள சத்திரத்தில் தங்கி இளைப்பாறி உணவருந்திச் செல்வது நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தல்விருட்சமான புரசை மரம், வடக்குச் சுற்றில் தீர்த்தக் கிணறுக்கு அருகே செழித்து நிற்கிறது. வசந்த மண்டபம் நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 12.07.2009 இல் அஷ்ட பந்தன மகாசம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மாதாந்திர திருவோண நட்சத்திர நாளில் மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். ஆனி மாதம் வருஷாபிஷேகம், ஆவணி மாதம் மகா ஓணம், புரட்டாசி சனிக் கிழமைகளில் சுவாமி புறப்பாடாகி வீதி உலா, ஐப்பசி சதய நட்சத்திர நன்னாளில் திருக்கல்யாணம், ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, கருட பஞ் சமி, மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி, வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்கள் ஆண்டு முழுவதும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.
வாழ்வில் பூரண நலமும், குறையாத செல்வமும், தொழில் அபிவிருத்தியும் வேண்டுவோர் அவசியம் ஒருமுறை குடும்பத்துடன் நரசிங்கநல்லூர் சென்று அந்த நாராயணனை சேவித்து வரலாமே!


