முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தற்போது 2021-22 ஆம் ஆண்டுக்கான விருதை நாடகத்திற்காக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் கலைபண்பாடு துறை சார்பாக கலைநன்மணி விருதை ஆட்சிதலைவர் மரு.கி.செந்தில்ராஜ் வருகிற 24 ந்தேதி தூத்துக்குடியில் உள்ள இயல் இசை பள்ளியில் வைத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலை பண்பாட்டு துறை துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் செய்து வருகிறார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை வரலாற்று எழுத்தாளராக மட்டுமே சமீப காலமாக பார்த்து வருகிறோம். தாமிரபரணி நதி, மேற்குதொடர்ச்சி மலை, சித்தர்கள் வரலாறு, ஜமீன்தார்கள் வரலாறு, களரி அடிமுறை வரலாறு, தூத்துக்குடி மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு என பயணித்து வரும் இவர் ஆரம்ப காலத்தில் கிட்ட தட்ட 48 வருட காலமாக நாடகத்துறையிலும் பயணித்து வருகிறார்கள். நாடக துறையில் முத்தாலங்குறிச்சி காமராசு பயணித்த வரலாற்றை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா முத்தாலங்குறிச்சி எனும் தாமிரபரணிக்கரை கிராமத்தில் திரு. சங்கரசுப்பு- திருமதி சொர்ணம்மாள் தம்பதிக்கு மகனாக இவர் பிறந்தார். தனது துவக்கப் பள்ளி படிப்பை முத்தாலங்குறிச்சி புனித வளன் துவக்கப்பள்ளியில் படித்தார். 1978 ஆம் ஆண்டு இக் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாத காரணத்தால் பஸ் விட ஏற்பாடு செய்யும் முயற்சியில் இவரது தந்தை சங்கரசுப்பு ஈடுபட்டார். அந்த சமயத்தில் தினமும் 2 டிக்கெட் இருந்தால் மட்டும் பஸ் விடுவோம் என்று கம்பெனி அதிபர் கூறிய காரணத்தால் இவரையும் இவரது நண்பர் நல்லையா என்பவரையும் 6ஆம் வகுப்பு படிக்க பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்பு 7 முதல் 10ஆம் வகுப்பு வரை பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் இவரது படிப்பு தொடர்ந்தது. மேல்படிப்பு படிக்க போதிய வசதி இல்லாத காரணத்தாலும், பாளையங்கோட்டை சென்று கல்வி கற்க இயலாமல் போய்விட்டது. எனவே மேல்நிலைப்பள்ளி படிப்பை கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது தினமும் 6 கிலோ மீட்டர் தாமிரபரணி ஆற்றங்கரையில், ஆற்றுமணல் வழியாகவும், அடர்ந்த காடு வழியாகவும், வயல்கரை வழியாகவும் நடந்தே சென்று கருங்குளத்தில் மேல்நிலைக் கல்வி பயின்றார்.
6.03.1987 ல் “தேவி வார இதழில்” துணுக்கு எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் மும்பைக்கு சென்று வேலை செய்தார். அப்போது அங்குள்ள “மராத்திய முரசு”, “போல்டு இந்தியா” ஆகிய பத்திரிகையில் சிறுகதை எழுதினார். தொடர்ந்து கிராமத்தில் செங்கல் சூளையில் கணக்கு பிள்ளையாக வேலை பார்க்கும் போது நெல்லை வானொலி நேயரானார். அதில் நாடக நடிகராக முயற்சி செய்தபோது குரல் வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். விடாமுயற்சியால் நெல்லை வானொலியில் நமக்குள்ளே பகுதிக்கு கடிதம் எழுதினார். பின் வாசகராகவே வானொலியில் ஒலிபரப்பாகும் இளையபாரதம் நிகழ்ச்சியில் உரை, சிறுகதை எழுதி வாசித்தார்.
3.10.1988ஆம் நாள் இவரது “குருவை மிஞ்சிய சீடர்” எனும் உரை அறிமுகமானது. அதன் பிறகு 15 நிமிட “கண்டிஷன் கண்டிஷன்” எனும் நாடகம் ஒலிபரப்பானது. தொடர்ந்து அரை மணி நேர நாடகம் எழுதி, ஒரு மணி நேர நாடகம் எழுதும் எழுத்தாளராக உயர்ந்தார். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் (27.06.2010) நடந்த போது “என்று தணியும் இந்த தாகம்” என்னும் ஒரு மணி நேர நாடகம், அனைத்து வானொலியிலும் ஒலிபரப்பானது. இவரது “ரோபோ மருமகள்” எனும் அறிவியல் நாடகம் 7.10.2009 அன்றும், “மனம் சொல்லும் மௌனம்” என்ற மற்றொரு நாடகமும் நாடக விழாவில் நெல்லை வானொலி நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பானது.
வானொலி விழா நாடகத்தில் நெல்லை வானொலி சார்பில் இவரது மற்றொரு நாடகமாக உயிர்மூச்சு தேர்வாகி 7.06.2019 அன்று இரவு தமிழகம், பாண்டிச்சரி«யில் உள்ள அனைத்து வானொலிகளிலும் இரவு 8 மணிக்கு ஒலிப்பரப்பானது. நாடகத்துறையில் சிறு வயதில் இருந்தே இவருக்கு ஆர்வம் அதிகம்.
இவர் 1975 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலயத்திடலில் நாடக நடிகராய் அறிமுகமானார். முதல் நாடகத்தில் ஒரு வார்த்தை வசனம் கூட பேச வெட்கப்பட்டு இடையிலேயே மேடையை விட்டு இறங்கியவர். அதனால் ஆசிரியையிடம் குட்டுப் பட்டார். அதன் பின் முத்தாலங்குறிச்சி கிராமத்தில் தேன்கூடு இளைஞர் மன்றம் சார்பில் ஆசிரியர் ஸ்டிபன் எழுதி இயக்கிய நீதியின் நிழல், மணிதரில் மாணிக்கம் போன்ற நாடகத்தில் பெண் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் பிறகு எப்படியாவது நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நாடக நடிகர் தேர்வுக்கு சென்றார். அங்கேயும் உச்சரிப்பு சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டார். அப்போது தான் நாமே நாடகம் எழுதினால் என்ன என்று இவருக்கு தோன்றியது. 1992 ல் ஆறாம்பண்ணை கிராமத்தில் இவர் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்த மாமனின் காதலி நாடகம் அரங்கேறியது. தொடர்ந்து அதே நாடகம் வல்லகுளம் அரசர்குளம் கிராமத்திலும் அரங்கேறியது. அதன் பிறகு தொடர்ந்து பல நாடகங்கள் எழுதினார். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஆறாம்பண்ணை, வல்லக்குளம், கிளாக்குளம், வெட்டிக்குளம், புதுக்குளம் கிராமங்களில் இவரது நாடகங்கள் அரங்கேறியது. தொலைக்காட்சியிலும் இவரது பங்களிப்பு உண்டு.
வசந்த் டிவியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மண்ணின் பெருமை பேசும் “நெல்லை மண் பேசும் சரித்திரம்’ என்னும் தொடரில் 75 வாரம் பங்காற்றினார். பின்னர் அந்த அனுபவம் எல்லாவற்றையும் தொகுத்து “தென் பாண்டிச் சீமையிலே பாகம் -1, தென்பாண்டிச்சீமையிலே பாகம் -2” ஆகிய 1,000 பக்கங்கள் கொண்ட 2 நூல்களை எழுதினார். இதில் இரண்டாவது பாகம் 22.06.2013 அன்று நெல்லை கலெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் நெல்லை புத்தக கண்காட்சியில் வெளியானது. முதல் நூல் உலக அளவில் நடந்த சிறந்த நூல்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதன் பிறகு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் அவர்கள் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் என்னும் நூலை மாவட்ட நிர்வாகம் மூலமாக வெளியிட்டார். இதற்காக அவர் கள ஆய்வு செய்து தகவலை திரட்டினார். இந்த திரட்டிலில் கிடைத்த லோன் துரை கொலை வழக்கை நாடகமாக எழுதி அதையும் அந்த நூலில் வெளியிட்டுள்ளார்.
இவரது நாடக பங்களிப்பு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் ஆறாம்பண்ணை, முத்தாலங்குறிச்சி, வல்லகுளம் அரசர்குளம், புதுக்குளம், கிளாக்குளம் வெட்டிகுளம் ஆகிய பகுதியில் தொடர்கிறது. சாத்தான்குளத்தில் நடைபெறும் நாடக விழாவிலும் இவர் கலந்து கொள்வது வழக்கம். செய்துங்கநல்லூர் ஆர்.சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளை ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்த ஆயுத பூஜையில் நாடக விழா நடத்தி நிகழ்ச்சிகளை நடத்தினார். பாளையங்கோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலமாக கொங்காந்தான் பாறை, தருவை ஆகிய கிராமத்தில் இவர் எழுதி இயக்கி நடித்த நாடகங்கள் அறங்கேறியுள்ளது. கிராமங்களில் நாடகம் நடிக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு ஆரம்ப காலகட்டத்திலேயே ஏற்பட்டது. நடிகரும், செய்துங்கநல்லூரை சேர்ந்தவருமான டாக்டர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி இவருடைய நாவலை திரைப்படமாக்க முயற்சி செய்து வருகிறார். அதற்கு முன்பாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
நடிகரும் இயக்குனருமான திரு.சேரன் அவர்கள் தயாரித்து, நடிகை திருமதி ரோகிணி அவர்கள் இயக்கிய “அப்பாவின் மீசை” என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ராட்டினம் பிக்சர்ஸ் தயாரிப்பில் முத்துநகர் இயக்குனர் திரு.கே.எஸ்.தங்கசாமி அவர்கள் இயக்கத்தில் “எட்டுத்திக்கும் மதயானை” படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் “நெல்லை சீமையிது” என்ற பாடலில் திருநெல்வேலியின் பெருமையினை பத்தமடை பாயி என தொடங்கி இன்னும் நிறைய விஷயம் சொல்லலே..” என்ற 12 வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வந்து இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் இவரது நண்பர் தம்பி இப்ராகீம் அவர்கள் இயக்கிய “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” என்னும் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக நடித்துள்ளார். அந்த படமும் சிறப்பாக வெளி வந்து வெற்றி பெற்றது. இவர் எழுதி இயக்கிய “பொருநை சுடர்” என்ற ஆவணப் படம் வெளிவந்துள்ளது. கௌசானல் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த ஆவணப் படத்தை திருஇருதய சகோதரர்கள் தயாரித்தனர். அதோடு மட்டுமல்லாமல் இவரது மகன் அபிஷ்விக்னேஷ் அவர்களின் மீடியா கிருக்கன் சேணல் மூலமாக 200 வீடியோவுக்கு மேல் ஒருங்கிணைந்த நெல்லை சீமையை பற்றி பேசியுள்ளார். இவரது சிஷ்யன் சுடலை மணி செல்வனின் தூத்துக்குடி முத்துக்கள் யூ டியுப் சேணலில் தூத்துக்குடி பெருமையை இவர் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்காக கா. அபிஷ்விக்னேஷ் இயக்கிய ஆவணப்படங்களில் இவர் நடிகராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதி வெளியிட்ட தினத்தந்தியின் ‘அருள் தரும் அதிசய சித்தர்’ நூலுக்காக சென்னை புத்தக கண்காட்சியில் தினத்தந்தி ஸ்டாலில் சிறப்பு விருந்தினராக அமர்ந்து வாசகர்களுக்கு கையெழுத்து இட்டார். மறுநாள் இந்து பதிப்பகத்தில் இவரது ‘தேரிக்காட்டு ஜமீன்தார்கள்’ வரலாறு நூலுக்காக அந்த ஸ்டாலில் அமர்ந்து கையெழுத்திட்டார். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் வரலாறு நூலில் உள்ள சாத்தான்குளம் ஜமீன்தார் வரலாற்றில் அன்றைய கால ஆணவக்கொலையை திரைப்படமாக்க சில இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள். இவர் எழுதிய நாடங்களை இவரது சிஷ்யன் சுடலைமணிச்செல்வன் முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள் என்ற தலைப்பில் நூலாக தொகுத்துள்ளார்.
இவர் எழுதிய வரலாற்று நாடகங்களில் கட்டபொம்மனும் கவிராயரும் என்ற நாடகம் நெல்லை வானொலியில் திருச்செந்தூர் கோயில் திருவிழா காலங்களில் அடிக்கடி ஒலிபரப்பாகும். இதனால் பல முறை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இவர் எழுதிய வானொலி மற்றும் மேடை நாடகங்கள்
1.14.10.1995 முடிச்சுமேலே முடிச்சு மேடைநாடகம், வெட்டிகுளம்
2. 11.12.1996 கலங்க வேண்டாம் (ஆல் இந்திய ரேடியோ )
3.23.05.1996 வடதுருவம் தென் துருவம் (ஆல் இந்திய ரேடியோ)
4.15.11.1994 நம்ம பஞ்சாயத்து
5. 29.04.1997 பாதை தெரியுது
6. 16.01.1998 கண்மணியின் காதலன், வல்லகுளம்
7.17.09.1998 கட்டபொம்மனும் கவிராயரும் ஆல் இந்திய ரேடியோ (இந்த நாடகம் 5 தடவை
மறு ஒலிப்பு செய்யப்பட்டுள்ளது. 31.10.2003, 30.11.2001, 8.01.2002, 3.10.2002, 29.05.2002)
8.30.09.2001 தங்கையின் வாழ்வு மல்லல் புதுக்குளம், மேடை நாடகம்
9. 12.06.2002 தெரு முனை நாடகம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் (கொங்கந்தான்பாறை,
தருவை)
10.4.09.2002பெண்ணின் பெருமை மல்லல் புதுக்குளம்
11. 12.12.2003 சட்டாம் பிள்ளை பேரன் ஆல் இந்திய ரேடியோ (மறு ஒலிபரப்பு 23.04.2004)
12.06.09.2006எங்க வீட்டு மருமகள் மல்லல் புதுக்குளம்
13. 27.06.2006 என்று தணியும் இந்த தாகம் (ஆல் இந்திய ரேடியோ) (செம்மொழி மாநாடு-கோவை தமிழ்நாடு முழுவதும்)
14. 14.01.2009 ரோபா மருமகள் மாவடிபண்ணை
15.நவம்பர் 2009 ரோபா மருமகள் சாத்தான்குளம்
16. அக்டோபர் 2008 ரோபா மருமகள் வேப்பங்காடு
21.15.08 நாடகம், பண்டாரபுரம்
22.25.05.1992 கண்டிஷன் கண்டிஷன் (ஆல் இந்தியா ரேடியோ)
23.03.08.1990 மேடை நாடகம், ஆறாம்பண்ணை
24. 07.01.1991 மாமனின் காதலி ஆறாம்பண்ணை
25.14.05.1992 அண்ணி என் தெய்வம், வல்லக்குளம்
26.14.10.1992 தங்கையின் வாழ்வு, புதுக்குளம்
27 27.07.1992 உயிர் தியாகம், அரசர்குளம்
28.10.05.1992 கண்டிவுன் கண்டிஷன் நேயர் மன்றம்
29.6.02.1991 மாமனின் காதலி, வல்லக்குளம்
30.16.01.1993 தொழிலை மதிப்போம்( ஆல் இந்திய ரேடியோ)
31. 2.04.1991 கண்டிஷன் கண்டிஷன், (ஆல் இந்திய ரேடியோ )
32. நீதியின் நிழல் (கதாநாயகி) முத்தாலங்குறிச்சி
33. மனிதரில் மாணிக்கம் (கதாநாயகி) முத்தாலங்குறிச்சி
34.5.02.1995 நிறம் மாறும் உறவுகள், (ஆல் இந்திய ரேடியோ )
35.3.02.1995 மீனுவுக்கு கண் தொறந்தாச்சு. (ஆல் இந்திய ரேடியோ )
36.25.03.1995 மீனுவுக்கு கண் தொறந்தாச்சு,
எம்.எம்.ஸ்கூல், செய்துங்கநல்லூர்.
37. 25.03.1995 ஆட்டோவில் வந்த வரன், (ஆல் இந்திய ரேடியோ)
38.3.08.1995 திருந்திய பின் வந்த விளைவு.( ஆல் இந்திய ரேடியோ)
39.6.09.2006 எங்கள் வீட்டு மருமகள், புதுக்குளம்
40.17.03.1906 முடிச்சு மேலே முடிச்சு, (ஆல்இந்திய ரேடியோ மறு ஒலிபரப்பு 14.01.2006)
41. கஞ்ச மாமா, தாதன்குளம்
42. கஞ்சமாமா, ஆல் இந்திய ரேடியோ
43. மனம் சொல்லும் மௌனம்( ஆல் இந்திய ரேடியோ) (நாடகவிழா)
44. முடிச்சு மேலே முடிச்சு மேடை நாடகம் கிளாக்குளம் 13.08.2017
45.07.06.2019 உயிர் மூச்சி வானொலி விழா நாடகம்
தற்போது லோன் துரை நாடகம் ஆல் இந்திய ரேடியோவில் ஒலிபரப்பாக உள்ளது.
இந்த விருது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் கேட்டபோது, ஆரம்ப காலத்தில் நாடகத்தின் மீது ஆர்வமாக இருந்த நான் எதிர்பாராத விதமாக முழு நேர எழுத்தாளராக மாறி விட்டேன். ஆனாலும் நாடக தாககம் குறையவில்லை. எனவே தொடர்ந்து 48 வருடங்களாக நாடக துறையில் இயங்கி கொண்டிருந்தேன். இந்த வேளையில் என் பணியை இனங்கண்டு விருது கொடுத்து கௌரவித்த மாவட்ட ஆட்சி தலைவருக்கும், கலை பண்பாட்டு துறை துணை இயக்குனருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். என்றுஅவர் கூறினார்.
கலை நன்மணி விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை நாமும் பாராட்டு வோம்.


