முறப்பநாட்டில் தாமிரபரணி ஆற்றில் தார்ச்சாலை கழிவுகளை கொட்டிய சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கப்பட்டு 2012 ம் ஆண்டு திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் தாமிரபரணி நதிக்கு இடையே மிக பிரமாண்டமான பெரிய பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் அமைக்க பட்ட நேரத்தில் இருந்தே பல முறை பாலத்தில் சேதம் அடைந்து ஓட்டை விழுந்தது. இதனால் பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் தற்போது பாலத்தில் ஒரு பக்கம் வழியாக போக்குவரத்து நடந்து வருகிறது. மேலும் பாலத்தை சீரமைக்க 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கடந்த 2 மாத காலமாக பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாலத்தின் மேல் பகுதியில் உள்ள தார்ச்சாலைகள் அகற்றும் பணிகள் நடந்து வந்தது. அப்போது கடந்த 17.11.2022 அன்று பாலத்தில் இருந்து அகற்றப்பட்ட தார் சாலை கழிவுகள் அனைத்தையும் பணியின் போது அப்படியே தாமிரபரணி ஆற்றுக்குள் வீசினர்.
இதுகுறித்து மேலபுத்தனேரியைச் சேர்ந்த பசுமை தமிழ் தலைமுறை அமைப்பைச் சேர்ந்த சுகன் கிறிஸ்டோபர் கடந்த 15ம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பது.
தூத்துக்குடி திருநெல்வேலி இந்திய தேசிய நெடுஞ்சாலையான முறப்பநாடு பாலத்தில் தனியார் நிறுவனத்தால் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 17.11.22 அன்று இரவு 11 மணி அளவில் பாலத்தில் மேல் உள்ள அகற்றிய தார் கழிவுகளை தாமிரபரணி ஆற்றில் உள்ளே பாலத்தின் பராமரிப்பு நிறுவனத்தின் திட்ட மேலாளர் ஹர்ஷா தலைமையில் தாமிரபரணி ஆற்றில் கொட்டியுள்ளனர். இதனால் தாமிரபரணி ஆறு மாசு அடைந்துள்ளது. எனவே தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவன அதிகாரி ஹர்ஷா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


