திருநெல்வேலி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழில் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கும் அரசுத் துறையின் திட்டங்களும், தனியார் நிறுவனங்களும் நீர் பயன்பாட்டு வரித் தொகை ரூ, 246 கோடியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தலங்குறிச்சி காமராசு என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், வரும் நவம்பர் 20 விசாரணைக்கு வருகிறது.
வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்கள் விவரம்!
தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தும் சில தொழில் நிறுவனங்கள் வரியைச் செலுத்தாமல் பெரிய தொகையைப் பாக்கி வைத்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரி பாக்கி வைத்திருக்கும் 7 நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் நிலுவைத் தொகையின் விவரம் பின்வருமாறு:
இந்தியா சிமெண்ட் லிட்., சங்கர் நகர் நிலுவைத் தொகை: ரூ.3,83,12,674
டி.சி.டபிள்யூ லிட்., * சாஹுபுரம் – நிலுவைத் தொகை: ரூ.28,06,98,364
* 3 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) – நிலுவைத் தொகை: ரூ.10,15,33,121
20 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) – நிலுவைத் தொகை: ரூ. 2,04,34,44,554
*வி.வி.மினரல்ஸ், இராதாபுரம் – நிலுவைத் தொகை: ரூ.8,86,942
‘அர்ஜுன் பல்ப் அண்ட் பேப்பர் (இந்தியா) பிரைவேட் லிட். – நிலுவைத் தொகை: ₹1,18,800
இதில், தமிழ்நாடு நீர்வளத் துறையின் (TWAD) இரண்டு முக்கிய குடிநீர்த் திட்டங்களே ரூ, 214 கோடிக்கும்* அதிகமாகப் பாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள் வரியை செலுத்தாமல், தாமிரபரணி தண்ணீரைத் தொடர்ந்து எடுத்து வருவதாகவும், போதிய கண்காணிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முத்தாலங்குறிச்சி காமராசு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிமன்றுக்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரியுள்ளார். தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுக்கும் அல்லது ஆற்றின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி, சட்டத்தின்படி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
பொதுப்பணித் துறையால் (PWD) நிர்ணயிக்கப்பட்ட நீர் பயன்பாட்டு கட்டணத்தை மறு ஆய்வு செய்து,முறைப்படுத்த வேண்டும். மேலும், இவ்வாறு வசூலிக்கப்படும் தொகை,தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கில், தமிழக அரசுச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் மேற்கண்ட நிறுவனங்கள் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தென் மாவட்டங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


