கிராமப்புற பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கும் பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : நடப்பு (2022 – 23) கல்வியாண்டில் கிராமப் புறங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6ஆம் வகுப்பு வரை பயிலும், மத வழி சிறுபான்மை சமூகத்தை (கிறித்தவர், இசுலாமியர், சமணம், சீக்கியர் மற்றும் புத்தம்) சார்ந்த பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்த்து, தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டொன்றுக்கு ஊக்கத்தொகையாக 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிக்கு ரூ.500/- மற்றும் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ.1000/-ம் பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவியரின் பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரு.1,00,000/- ற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து சிறுபான்மையினர் மாணவிகள் பயன் பெறலாம். மேலும் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பெண்குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் இதுகுறித்து தொடர்புடைய பள்ளி தலைமையாசிரியரை அணுக வேண்டும். இக்கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கு மாணவியரின் பெற்றோர் (அ) தாயார் (அ) பாதுகாவலரின் பெயரில் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் (Scheduled Commercial Bank) சேமிப்பு வங்கி கணக்கு துவங்கப்பட்டிருக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


